மதவெறி பாஜகவை வீழ்த்தனும்.. 3ம் அணி வேண்டவே வேண்டாம்.. காங்கிரசுக்கு ஐடியா கொடுக்கும் திருமாவளவன்
சென்னை: ‛‛மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும். சனாதானத்தை எதிர்க்கும் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும். இந்திய அரசியல் களத்தில் மூன்றாவது அணி ஏற்பட்டு விடக்கூடாது என்பதை தடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, மத்திய பாஜக அரசின் செயல்பாடு, இந்திய பொருளாதாரம் குறித்து பல்வேறு முக்கிய விஷயங்களை திருமாவளவன் பேசினார். இதுதொடர்பாக திருமாவளவன் பேசியதாவது:

மாற்றம் உறுதி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள். நெருக்கடியான காலச்சூழலில் காங்கிரஸ் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் முறைப்படி தேர்தல் நடத்தி நேரு குடும்பத்துக்கு அப்பாற்பட்ட ஒருவரை தேர்வு செய்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி உள்ளது. இது காங்கிரஸ் கட்சி மீதான நம்பகத்தன்மையை உயர்த்தி உள்ளது. குறிப்பாக பவுத்தத்தை பின்பற்றும் தலித் ஒருவர் உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளார் என்பது இந்திய அரசியலில் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகும். அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் பண்பு மாற்றத்தை இது உறுதிப்படுத்துகிறது.

3வது அணி வேண்டாம்
சனாதனத்தை எதிர்க்கக்கூடிய முன்னணி தலைவர்களில் ஒருவராக மல்லிகார்ஜூன கார்கே செயல்பட்டு வருகிறார். அவரை இன்று காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்துள்ளது. இது பாராட்டுக்கு உரியது. பாஜகவுக்கு எதிரான அரசியல் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்குரிய பணிகளை மல்லிகார்ஜூன கார்கே வெற்றிகரமாக முன்னெடுப்பார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்புகிறது. முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எக்காரணத்தை கொண்டும் இந்திய அரசியல் களத்தில் மூன்றாவது அணி ஏற்பட்டு விடக்கூடாது என்பதை தடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது'' என்றார்.

இந்திய ரூபாய் வீழ்ச்சி
ஆட்சிக்கு வந்தால் ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம் என மோடி கூறினார். ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மதவெறியை தூண்டும் பாஜக
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் மதவெறியை தூண்டுவதும், வெறுப்பு அரசியலை விதைப்பதும் போன்ற நடவடிக்கையில் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

மோடி தான் பொறுப்பு
மோடி அரசின் மதவெறி அரசியல் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு மோடி அரசின் வெறுப்பு அரசியலும் ஒரு காரணமாகும். நாற்பது ரூபாய் என்ற அளவில் ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம் என வாக்குறுதி கூறினார் மோடி. இதனால் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் மோடி தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மோடி அரசு உள்ளது.

கைவிட வேண்டும்
வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியா பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உண்மையை மூடிமறைக்க முயற்சிக்கிறார். மோடி, அமித்ஷா ஆகியோர் சாதி, மத அரசியலை கைவிட்டுவிட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications