திருமாவளவன் ஏன் இப்படி சொல்றாரு.. "இது ஜஸ்ட் டிரையல்தான்".. டக்கென திரும்பி பார்க்கும் திமுக, பாஜக
திருமாவளவன் புதுச்சேரி பாஜக குறித்து கருத்து கூறியுள்ளார்
சென்னை: புதுச்சேரியில் கொல்லைப்புற ஆட்சி, தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள்.. அனைவரும் விழித்து கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் மீண்டும் ஒருமுறை தன் கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
பொதுவாக பாஜகவின் அரசியல் என்பதே வித்தியாசமானது.. எல்லாரும் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாஜக மட்டும் தேர்தலுக்கு பிந்தைய அரசியலையே பிரதானமாக கையில் எடுத்து வருவது இயல்பாகும்.
அதாவது, தேர்தல் சமயத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, தங்கள் பக்கம் இழுப்பது போன்ற சூட்சுமங்களை கையாண்டு, பிரதான கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாமல் போக செய்துவிடும்.. அதன்பிறகு, ஆட்சியில் பங்கு, கூட்டணி என்று விஷயத்துக்கு வந்து நிற்கும்.

வடமாநிலம்
பெரும்பாலான வடமாநிலங்களில் இப்படித்தான் பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது என்பதை நாடறியும்.. ஆனால், கடந்த வருடம் திடீரென புதுச்சேரி பக்கம் இதே பார்முலாவை கையில் எடுத்தது பாஜக.. அரசியல் வியூகத்தில் அன்று ஜெயலலிதாவையே திணற வைத்த ரங்கசாமி, பாஜகவின் காய் நகர்த்தலில் சிக்கிதான் போனார்.. எதிர்பார்த்தபடியே கூட்டணி ஆட்சியும் அமைந்தது.

திருமாவளவன்
அந்த நேரம் திருமாவளவன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பாகவே நியமன எம்எல்ஏ-க்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சட்டத்துக்கு விரோதமான முறையில், கொல்லைப்புறமாக, ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜகவின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.. நட்புக்கு துரோகம் இழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர்.காங்கிரஸ் இந்த நிலையிலாவது விழித்துக்கொள்ள வேண்டும்" என்று எச்சரித்திருந்தார்.

சனாதனிகள்
அதுமட்டுமல்ல, "அரசியல் கட்சிகள், கொள்கை பிடிப்பு இல்லாத தற்குறிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் என்ன ஆகும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் புதுச்சேரி சம்பவம்.. தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள்... புதுச்சேரியில் நடப்பது வெறும் டிரையல்தான்... அந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு வருவதற்கு ரொம்ப நாள் ஆகாது" என்றும் திருமாவளவன் காட்டமாகவே கூறியிருந்தார்.

பிரபலங்கள்
தமிழகத்தில் பிரபலங்கள் சிலர், திடீரென பிரதமர் மோடியைப் புகழ்ந்தும், புகழ் பெற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டும் பேச ஆரம்பித்திருப்பது பாஜகவின் திட்டமாக பலரும் கருதும் நிலையில், திருமாவளவன் அன்று பேசியதையும் இன்று ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது.. வட கிழக்கு மாநிலங்களை போல, தமிழகத்தில் அப்படி ஒரு சாதகமான வெற்றியை பாஜகவால் எளிதில் பெற முடியாது என்றாலும், அரசியல் கட்சிகளின் அல்லது அரசியல் தலைவர்கள் பலவீனங்கள், பாஜகவுக்கு சாதகமாக போய்விடக்கூடாது என்ற நிலைமையும் உள்ளது.

தமிழகம்
கர்நாடகம் வரை வந்தவர்கள், புதுச்சேரி வரை வந்தவர்கள், தமிழகத்தையும் விட்டுவிட மாட்டார்கள் என்றாலும், இங்குள்ள எதிர்ப்புகளும் பாஜகவுக்கு உள்ளூர கலக்கத்தை தந்துதான் வருகிறது.. இன்று புதுச்சேரியில் பாஜக ஆட்சி கலையும் என்ற பேச்சு எழுந்துள்ளது.. இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டு, பாஜக தனித்து களம் காண போவதாக செய்திகள் சில தினங்களுக்கு முன்பு அடிபட்டன.

பச்சைக்கொடி
இந்த முடிவை புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து எடுத்ததாகவும், இவர்களின் முடிவுக்கு பாஜக மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் சுரானா தெரிவித்திருந்தார்.. எனவே, மறுபடியும் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு நடக்க போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது... துணை நிலை ஆளுநரின் துணையுடன் அந்த குட்டி மாநிலத்தை பாஜக தனது பிடியில் வைத்துள்ள நிலையில், திருமாவளவன் அன்று சொன்னபடியே, மொத்த மாநிலத்தையும் கைப்பற்றும் வியூகமும் தொடர்கிறது..

திருமா பேட்டி
நேற்றுகூட திருமாவளவன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்கும் ஆளுநர் மூலம் மத்திய பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல் வெளியாகின்றன. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. முன்னாள் முதல்வர் நாராயணசாமியைப் போல ரங்கசாமி வெளிப்படையாக எதிர்க்காமல் அமைதி காப்பதும் அதிர்ச்சியாக உள்ளது.. அவர் சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும்.. மத்திய அரசின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி ஜனநாயக சக்திகள் இப்பிரச்சினையில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. எனினும், ரங்கசாமி அடுத்து என்ன செய்ய போகிறார்? தமிழக கட்சிகள் என்ன போகின்றன என்பது தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications