திருப்பரங்குன்றம்: மதுரைக்கு தேவை எது? வளர்ச்சி அரசியலா அல்லது ..... அரசியலா? ஸ்டாலின் கேள்வி!
சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அதில், மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ........... அரசியலா?, மக்கள் முடிவு செய்வார்கள் என்றும், மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகளையே மக்கள் கேட்பதாகவும் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் உச்சி மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மதுரையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தர்காவுக்கு 15 மீட்டர் தூரத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜகவினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.

அதேபோல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருக்கிறது. முன்னதாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் திருப்பரங்குன்ற கோயில் நிர்வாகம் வழக்கம் போல் உச்ச பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது. இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் நீதிபதியிடம் முறையிட, உடனடியாக சிஐஎஸ்எஃப் அதிகாரிகளுடன் மனுதாரரை அனுப்பி கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு மாவட்ட நிர்வாகம் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி, நீதிமன்ற அவமதிப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது.
ஆனாலும் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் நேற்றிரவு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளது. இதனால் நேற்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.
இதனால் திருப்பரங்குன்றம் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் கூடி கோஷம் எழுப்ப தொடங்கினர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. தற்போது திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ........... அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள்.. இவைதான் மாமதுரை வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டாலினின் கருத்தை திமுகவினர் பலரும் ஆதரித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
