"சனாதன" நாகரீக மரபில் வாழ்வின் ஆழத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர்: ஆளுநர் ரவி பதிவு!
சென்னை: இந்தியாவின் சனாதன நாகரிக மரபில், வாழ்க்கையின் ஆழத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி ஆடை தரித்த வள்ளுவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியால் திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில், பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மிகுந்த பயபக்தியுடனும் நினைவு கூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார்.
பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார்.

இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்று பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் காவி ஆடை தரித்த புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி இருந்தார். அது சர்ச்சையான நிலையில், நடப்பாண்டிலும் காவி ஆடை தரித்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். கடந்த சில வாரங்களாக தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் பலரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எக்காலத்துக்கும், எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை, உலகம் முழுவதும், பல மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரில் சர்வதேச திருவள்ளுவர் கலாச்சார மையம், மலேசியா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை உட்பட, உலக நாடுகளில் திருவள்ளுவர் பெருமையைக் கொண்டு சேர்த்திருக்கிறார். மனிதக் குலத்தின் வாழ்வியல் முறைகளும், பாரதத்தின் கலாச்சாரமும் ஒருங்கே நிறைந்திருக்கும் திருக்குறளைப் படிப்போம். தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றி வணங்குவோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிலும் திருவள்ளுவர் காவி உடை தரித்திருப்பது குறிப்பிடத்தகக்து.












Click it and Unblock the Notifications