சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுயாட்சி முழக்க முன்னோடி... கருணாநிதி பிறந்த நாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க திருமாவளவன் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றிய, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை மாநில உரிமைகள் நாள் என அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தொல். திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை: சமத்துவப் பெரியார் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளில் அவர் தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளைப் பெருமையோடு நினைவு கூர்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு இந்நாளில் எமது வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் எண்ணற்ற நன்மைகளைச் செய்தவர் சமத்துவப் பெரியார் கருணாநிதி, திமுகவின் தலைவராக, முதலமைச்சராக, எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக அவர் ஆற்றிய பணிகள் யாவும் நினைக்கும் போதெல்லாம் வியக்க வைப்பவை. பல்வேறு தளங்களில் அவர் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறார் என்றாலும் இந்திய அளவில் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அவரது முதன்மையான சாதனை என்பதை எவரும் மறுக்க முடியாது.

மக்கள் உயிர் காப்போம்; அப்பாக்களின் நினைவுகளால்...கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின், கனிமொழி நெகிழ்வுமக்கள் உயிர் காப்போம்; அப்பாக்களின் நினைவுகளால்...கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின், கனிமொழி நெகிழ்வு

மத்திய- மாநில உறவுகள்

மத்திய- மாநில உறவுகள்

இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம் 11 ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. எனினும், அதற்கு எதிரான குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கியதால், 'மத்திய-மாநில உறவுகளை' ஆய்வு செய்வதற்காக 'நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை' (1966) மத்திய அரசு அமைத்தது. அந்த ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

மாநில சுயாட்சிக்கான தீர்மானம்

மாநில சுயாட்சிக்கான தீர்மானம்

ஆனால் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, மன நிறைவு கொள்ளவில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சரும் செய்யத் துணியாத ஒன்றை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி செய்தார். மத்திய மாநில உறவுகளை ஆராய 1969ஆம் ஆண்டு நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அவர் அமைத்தார். அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

தமிழகத்தை பின்பற்றி...

தமிழகத்தை பின்பற்றி...

தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம் இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது. பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அனந்தபூர் சாகிப் தீர்மானத்தை (1973) இயற்றவும்; மேற்குவங்கத்தை ஆட்சி செய்துவந்த இடதுசாரி அரசாங்கம் மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவும் (1977) அதுவே தூண்டுகோலாக அமைந்தது. அவற்றின் காரணமாக மத்திய மாநில உறவுகளை ஆராய 1983 ஆம் ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையம் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டது.

நம்பிக்கை தரும் ஸ்டாலின்

நம்பிக்கை தரும் ஸ்டாலின்

சர்க்காரியா ஆணையம் அளித்த பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. பாஜக அரசால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் இந்தச் சூழலில் கருணாநிதி முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது எப்படி தனது அளப்பரிய துணிவையும் ஆற்றல்மிகு தலைமைப் பண்பையும் அரசியல் களமே அதிரும் வகையில் வெளிப்படுத்தினாரோ, அதேபோன்று தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,துணிவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது.

பினராயி விஜயன், மமதா அறைகூவல்

பினராயி விஜயன், மமதா அறைகூவல்

மோடி அரசின் மாநில உரிமைகள் பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதத்தின் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார். அதுபோலவே, மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மதிப்புக்குரிய மம்தா பானர்ஜியும் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

கருணாநிதி பிறந்த நாள்- மனித உரிமைகள் நாள்

கருணாநிதி பிறந்த நாள்- மனித உரிமைகள் நாள்

இந்நிலையில், கருணாநிதி காலத்தில் மாநில உரிமை மீட்புக் களத்தில் மகத்தான சாதனைகளைச் செய்த தமிழகம் இப்போது பின்தங்கி விடக்கூடாது. எனவே, சமத்துவப் பெரியார் கருணாநிதி வழியில் தமிழக முதலமைச்சர், பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், கருணாநிதி உருவாக்கிய மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வு துளியும் மங்கிப்போகாமல் பாதுகாக்கப்படுவதற்கு ஏதுவாக, கருணாநிதி பிறந்தநாளை 'மாநில உரிமைகள் நாள்' என அறிவித்து தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும் என முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

English summary
VCK President and Loksabha MP Thol. Thirumavalavan has demanded to declare that June 3 - Former CM Karunanidhi's birthday as States Rights Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X