'நான் இப்போதும் அதிமுக உறுப்பினர்தான்; என்னை நீக்க முடியாது'.. அதிரடி காட்டும் தோப்பு வெங்கடாசலம்!
சென்னை: அ.தி.மு.க.வில் அமைச்சர்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு தருகிறார்கள். நேர்மையாக, நீண்ட காலம் உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
நான் அ.தி.மு.க.வில் உறுப்பினராகத்தான் உள்ளேன்; என்னை நீக்க முடியாது என்றும் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
அதிமுக சீட் கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் தோப்பு வெங்கடாசலம்.

சீட் கொடுக்காத அதிமுக
தமிழக தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் எம்.எல்.ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுகவிலும் சீட் கிடைக்காத விரக்தியில் பலர் உள்ளனர்.

தோப்பு வெங்கடாசலம் அதிருப்தி
முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலத்திற்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் ஜெயக்குமார் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது அ.தி.மு.க. இதனால் தோப்பு வெங்கடாச்சலம் கடும் விரக்தி அடைந்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கம்
இதையடுத்து, தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிட முடிவுசெய்தார். இதனை தொடர்ந்து பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து தோப்பு வெங்கடாசலதை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக அறிவித்தது.

என்னை நீக்க முடியாது
இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் அமைச்சர்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு தருகிறார்கள். நேர்மையாக, நீண்ட காலம் உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட தற்போதைய வேட்பாளர் ஜெயக்குமாரை ஏன் நீக்கவில்லை. நான் அ.தி.மு.க.வில் உறுப்பினராகத்தான் உள்ளேன்; என்னை நீக்க முடியாது" என்று கூறினார் தோப்பு வெங்கடாசலம்












Click it and Unblock the Notifications