திருத்தணி கோயில் உண்டியலில் கோடிகளை கொட்டிய பக்தர்கள்.. அள்ள அள்ள தங்கம்.. சிலிர்க்க வைத்த பக்தர்கள்
சென்னை: முருகனின் 5-ம் படை வீடாகத் போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 18 நாட்களில் மட்டும ரூ.1 கோடி உண்டியலில் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர் அத்துடன் 332 கிராம் தங்கமும் காணிக்கையாக கிடைத்திருக்கிறது என்றும் வெள்ளி 11 கிலோ 615 கிராம் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்ந்து வருகிறது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில். திருத்தணியில் உள்ள கோயில் எப்படிப்பட்ட இடம் என்றால், முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, இந்த மலைக்கோயில் 365 படிகளைக் கொண்டிருக்கிறது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற வழிபாட்டு தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலமான திருத்தணிக் கோயிலை தணிகை முருகன் கோயில் என்று அழைக்கிறார்கள்.

திருத்தணி மலையின் இரு பக்கங்களிலும் மலைகள் தொடர்ச்சியாக இருக்கிறது. கோயிலுக்கு வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப் பொய்கை என்ற புகழ் பெற்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் இருக்கிறது.
அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இந்த கோயில் ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது.. திருப்பதியில் இருந்து 66 கிலோ மீட்டர் தூரத்தில் திருத்தணி அமைந்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் திருப்பதி செல்லும் முன்பு திருத்தணிக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இல்லாவிட்டால் திருப்பதி சென்றுவிட்டு, வரும் வழியில் திருத்தணியை தரிசனம் செய்கிறார்கள். திருத்தணிக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வார்கள். அப்படி மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகிறார்கள்.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் அடிக்கடி ஊழியர்கள் எண்ணுவார்கள்.இதன்படியே திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
இதில் திருத்தணி கோயிலுக்கு கடந்த 18 நாட்களில் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 917 கிடைத்துள்ளது. இதேபோல் திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 615 கிடைத்துள்ளது . ஒட்டு மொத்தமாக ரூ.1 கோடியே 10 லட்சத்து 70 ஆயிரத்து 532 ரொக்கம் கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 332 கிராம், வெள்ளி 11 கிலோ 615 கிராம் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications