இப்போதான் சிறைக்கு போயிட்டு வந்துருக்கார்.. அதற்குள்! செந்தில் பாலாஜியை சீண்டிய அண்ணாமலை
சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில், சத்தீஷ்கர், டெல்லியில் மதுபான ஊழல் முறைகேடு வழக்கு மோசடி எப்படி இருந்ததோ, அதை விட சென்னையில் மதுபான ஊழல் முறைகேடு மோசடி இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இதையெல்லாம் மறைப்பதற்கு தான் இன்று தமிழக அரசு இலச்சினையை மாற்றி புதுசு புதுசாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்காங்க என்றும், இது நிச்சயமாக வருகின்ற நாட்களில் பூதாகரமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் டாஸ்மாக் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. இதில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. மேலும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10- முதல் 30 வரை கூடுதலாக பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த நிலையில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக கூறிய நிலையில், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இப்போது தான் அதன் அமைச்சர் சிறை சென்று வந்துள்ளார் அதற்குள் மீண்டும் இதேபோன்று ஒரு நிகழ்வு நடக்கிறது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது:-
இப்போ தான் சிறைக்கு சென்று வந்திருக்கிறார்
முதலில் இருந்தே இதைத்தான் நாங்கள் யூகித்தோம். நாங்க என்ன யூகித்தோமோ அதைப்போலவே அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி வந்து இருக்கிறது. எனவே நாங்கள் பயந்தது உண்மை தான். ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கமிஷன் நடந்துள்ளது. நிச்சயமாக சத்தீஷ்கர், டெல்லியில் மதுபான ஊழல் முறைகேடு வழக்கு இருந்ததோ, அதை விட சென்னையில் மதுபான ஊழல் முறைகேடு மோசடி இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது.
இதையெல்லாம் மறைப்பதற்கு தான் இன்று தமிழக அரசு இலச்சினையை மாற்றியுள்ளது. இதை மறைப்பதற்கு தான் தமிழக அரசு புதுசு புதுசாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்காங்க. இது நிச்சயமாக வருகின்ற நாட்களில் பூதாகரமாக மாறும். முதல்வர் ஸ்டாலினுடைய நேரடிப்பார்வையில் இருக்கிறது. டாஸ்மாக் துறையில் இருக்ககூடிய அந்த அமைச்சர் இப்போது தான் சிறைக்கு சென்று விட்டு வந்திருக்கிறார்.
இவ்ளோ பெரிய மோசடி
அவர் வந்த பிறகு மறுபடியும் இதேபோன்று ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால், தமிழக முதல்வர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்குது, டாஸ்மாக்கில் என்ன நடக்குது, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கிக்பேக். கமிஷன் ஊழல் என்று சொல்வதை விட இதில் கிக்பேக் நடந்திருக்கிறது.
டாஸ்மாக்கை முறையாக பயன்படுத்தாமல், மதுபான நிறுவனங்களை முறையாக பயன்படுத்தாமல், பேக்கான சீல் வைச்சு, பிளாக் மார்க்கெட்டில் தனியா, கலால் மற்றும் சுங்க வரிக்கு உட்படுத்தாமல் வெளியே கொண்டு வந்து இவ்ளோ பெரிய மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள். முதல்வர் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். பதில் சொல்வாரா என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்த செந்தில் பாலாஜி
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்ததையடுத்து மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை மற்றும் மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். தற்போது அவரது துறைக்கு கீழ் வரும் டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறியுள்ள நிலையில், செந்தில் பாலாஜியை சீண்டும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications