கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவு! அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும்.. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 24 அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தொகுதி மறுவரையறையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற லோக்சபா தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை குறிப்பாக தென் மாநிலங்களை இது வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதற்கு தென் மாநிலங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன.

கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
குறிப்பாக மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில், இது இருக்கும் என்பதால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக தமிழக கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த 5 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார்.
இந்தக் கூட்டத்தில் பாஜகவை தவிர இதர கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதோடு மட்டும் நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். அதாவது, தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து போராட முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை முயற்சி மேற்கொண்டார்.
24 அரசியல் கட்சி தலைவர்கள்
அதன்படி, கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கி நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று கூட்டத்தில் பங்கேற்க பல தலைவர்கள் ஒப்புதல் அளித்து இருந்தனர்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஆகியோர் நேற்று வருகை தந்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன் தினமே சென்னை வந்தடைந்தார். கர்நாடகாவில் இருந்து துணை முதல்வர் சிவக்குமார் இன்று வருகை தந்தார். அவரை அமைச்சர் பொன்முடி விமான நிலையம் சென்று வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினும் கூட்டம் நடைபெறும் இடத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்பி ஆகியோர் அவரை சந்தித்து பேசினர். காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னண்ணா மற்றும் ராஜேந்திர சோழன், ஆந்திராவை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர். கட்சியின் முன்னாள் எம்.பி. மிதுன் ரெட்டி,
தெலுங்கானா பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் வினோத்குமார், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கம்பக்குடி சுதாகரன், ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ், பிஜூ ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. அமர் பட்நாயக் ஆகியோர் இன்று காலை வருகை தந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் கூட்டம் தொடங்கியது. ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிற்பகல் 1.30 மணியளவில் கூட்டம் முடிந்தது. சுமார் 3.30 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
என்னென்ன தீர்மானங்கள்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அவரவர்கள் கருத்துக்களை பேசினர். மக்கள் தொகை கட்டுபாட்டை சிறப்பாக கடைப்பிடித்த மாநிலங்களுக்கு தண்டனையே இந்த தொகுதி மறுவரையறை என்றும் கூறினர். அடுத்த கூட்டத்தை தெலுங்கானாவில் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கேட்டுக்கொண்டதின் பேரில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொகுதி மறுவரையறையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications