Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களின் மன நலம் காக்க..விபரீத முடிவுகளை தடுக்க 'மனம்'..முதல்வர் ஸ்டாலின் சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு மனநலன் காக்கும் மனம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநலன் காக்கும் 'மனம்' என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் மன சஞ்சலத்தால் விபரீத முடிவுகள் எடுப்பதை தடுக்கும் பொருட்டு மனம் திட்டம் என்ற பெயரில் புதிய முயற்சியை நடைமுறைப்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை.

முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பிறகு படிப்படியாக பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அவசர முடிவுகளை எடுக்கின்றனர். சாதாரண விசயங்களுக்கு கூட மனம் வெறுத்து தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். மாணவர்களின் மன நலன் பேண மனம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

TN CM Stalin Launched Manam Scheme for Tamil Nadu College Students

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுவாக மனிதர்கள் உடல்நலத்தை பேணுவதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், மனநலத்தை பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்று சொல்லலாம். உடலும் மனமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமான ஆக்கப்பூர்வமான வாழ்வை நாம் வாழ முடியும்.

கல்லூரி மாணவர்களை பொருத்தவரை கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த பல்வேறு சவால்களை சந்திக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அச்சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகின்றனர். சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

இந்த வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை, அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், கூடுதலான நற்பலன்களை தரும். ​எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் மனம் என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் துவங்கப்பட்டு மனநல நல்லாதரவு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், மற்றும் அனைத்து வருட மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் மனம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மனநல நல்லாதரவு மன்றங்களின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மனநலம் பேணும் வகையிலும் மனநல மேம்பாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர் இத்தகைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொண்ட மனநல தூதுவர்கள் மூலமாக கல்லூரிகளிலுள்ள இதர ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

கூடுதலாக, மாணவர்களின் நலவாழ்விற்கான வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிய புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் மாணவர்களின் கலைத்திறன், கற்பனைத்திறன் உள்ளிட்ட அனைத்துவகை தனித்திறன்களை கண்டறிந்து, தனித்திறன் மேம்பாட்டிற்கான வழி வாய்ப்புகள் உருவாக்கப்படும்.​

உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் முதல் கட்டமாக மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். மனநல பிரச்சனைகள் வராமல் தடுப்பதும் மாணவர்களின் மனநல மேம்பாட்டினை உறுதி செய்து நிறைவான மாணவ பருவத்தை வாழ்ந்திட மாணவர்களை தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

TN CM Stalin Launched Manam Scheme for Tamil Nadu College Students

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கீழ்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 22.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊர்திகளை கொடி அசைத்து தொடங்கி வைத்து, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 'மனநல நல் ஆதரவு' மன்றங்கள் அமைத்து, மாணவர்களின் மன நலம் காக்கும் 'மனம்' திட்டத்தை தொடங்கி வைத்து, சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார். மேலும், சென்னை அரசு மன நலக் காப்பகத்தை தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் ஒப்புயர்வு மையத்தினை முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தி கட்டப்படவுள்ள கட்டடத்திற்கான முப்பரிமான வரைபடத்தை வெளியிட்டார்.

அவசர மருத்துவச் சிகிச்சை, தீ விபத்து, சாலை விபத்து போன்ற காலங்களில் பொதுமக்கள் '108' என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற ஏதுவாக, முத்தமிழறிஞர் கலைஞர் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் 15.9.2008 அன்று மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டது. இச்சேவையில் தற்போது 1,353 அவசரகால ஊர்திகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 7.5.2021 முதல் நவம்பர் 2022 வரை 9.10 இலட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட 32.05 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு 208 அவசரகால ஊர்திகளும், 130 மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளும் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக மனிதர்கள் உடல்நலத்தை பேணுவதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், மனநலத்தை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. உடலும் மனமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமான ஆக்கப்பூர்வமான வாழ்வை நாம் வாழ முடியும். இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' (Mind Health Support Forum) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மன நல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மன நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாணவர்களின் நலவாழ்விற்கான வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிய புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், மாணவர்களின் கலைத்திறன், கற்பனைத் திறன் உள்ளிட்ட அனைத்து வகை தனித் திறன்களை கண்டறிந்து, தனித் திறன் மேம்பாட்டிற்கான வழி வகைகள் உருவாக்கப்படும். உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முதலமைச்சர் இன்று, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் 'மனநல நல்லாதாரவு மன்றங்கள் (மனம்)" மற்றும் "நட்புடன் உங்களோடு - மனநல சேவை (14416)" ஆகியவற்றை தொடங்கி வைத்தார். பின்னர், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தற்காக காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்கள்.

இத்திட்டம் முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மன நல சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பாமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

TN CM Stalin Launched Manam Scheme for Tamil Nadu College Students

2022-23-ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, மனநலம் மற்றும் நரம்புசார் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான மாநில அளவிலான தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற ஒப்புயர்வு மையம், சென்னை அரசு மனநல மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அனைத்து வகையான மன நல சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும் வகையில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மன நலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு மன நல சேவையுடன் கூடுதலாக நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

குழந்தைகளுக்கான மன நலப் பிரிவு மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மன நல சிகிச்சை பெறும் வகையில் தனிப் பிரிவு செயல்படும். ஆட்டிசம் சிகிச்சை, முதியோர் நலன், போதை மீட்பு சிகிச்சை, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு மன நல சிகிச்சை ஆகிய சேவைகளும் இந்நிறுவனத்தில் செயல்படுத்தப்படும். மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மன நல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும். இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மன நல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மன நலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனம், உயர் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான சிறப்பிடமாக இருக்கும். மன நலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதல்-அமைச்சர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் மனநல மேம்பாட்டிற்கான ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் - சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+