துள்ளி வருது காவிரி.. கனமழை + கர்நாடகா நீர் திறப்பால் சட்டென சீறிப் பாய்ந்து வரும் தண்ணீர்!
சென்னை: ஒரே நாளில் காவிரி ஆற்றில் சட்டென நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் சீறிப்பாய்ந்து வருவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா காவிரி ஆற்றில் திறந்துவிட வேண்டும், அதனை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா அரசு சரிவர செயல்படுத்த மறுக்கிறது. உத்தரவு பிறப்பித்தும் தண்ணீர் திறக்காததால் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் சென்று நீதி பெற்று வந்தது தமிழ்நாடு. ஆனாலும், கர்நாடகாவில் போராட்டம் வெடித்ததே தவிர தண்ணீர் வரவில்லை. கடந்த ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா நிர்ணயித்த அளவை விட பாதி தண்ணீர்தான் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது மே மாதத்திற்கான தண்ணீரை திறக்க தமிழ்நாடு கோரியது. வரும் ஜூன் 12-ந்தேதிக்கு பின்னர் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் கர்நாடகா தரப்போ தங்கள் அணைகளில் போதிய நீர் இல்லை என்றும், தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால், தமிழகத்தில் போதிய அளவு நீர் இருக்கும். ஆகவே, தண்ணீர் திறக்க இயலாது என்று தெரிவித்தது. ஆனால், 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க கர்நாடகாவுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது காவிரி ஆணையம். இந்நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர் இள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. தலக்காவிரியில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக வறண்டு போயிருந்த காவிரி ஆற்றில், தொடர் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு 3045 கன அடி தண்ணீரும், கபினி அணைக்கு 1342 கன அடி என நீர் வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் இரு அணைகளும் வேகமாக நிரம்பத் தொடங்கின. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 783 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் 483 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள இந்த நீர் இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.. கர்நாடகாவில் மழை “சக்கைப்போடு”.. பெருக்கெடுக்கும் நீர்!
அதேபோல ஒகேனக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 1,200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று கிடுகிடுவென உயர்ந்து தற்போது 3,500 கன அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டிருப்பதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications