கிண்டியில் மருத்துவருக்கு கத்திக் குத்து.. “அவசர ஆக்ஷன் அவசியம்”.. பாய்ந்து வந்த ஆளுநர் ரவி!
சென்னை: மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு அந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் மற்றும் 3 பேர் இன்று மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியுள்ளார் விக்னேஷ்.
ரத்த வெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர் பாலாஜியை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர், தற்போது அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார்.
தலைநகர் சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவ சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டித்துள்ளார். ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "டாக்டர். பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications