Coolie: 9 மணிக்கு கூலி படத்தின் சிறப்பு காட்சி.. வெளி மாநிலங்களுக்கு படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 9 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. இந்தப் படத்தில் ஆமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர், நாகார்ஜூனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்துக்கு 'ஏ' சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்து விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆகஸ்ட் 15 மற்றும் அதனைத் தொடர்ந்து விடுமுறை நாட்களாக இருப்பதால் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமான தொகை வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் நாளை (ஆகஸ்ட் 14) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 9 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதேசமயம், அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் காலை 6 மணிக்கு காட்சிகள் தொடங்க உள்ளன. இதனால், தமிழக எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள், அண்டை மாநிலங்களுக்குச் சென்று கூலி படத்தின் முதல் காட்சியைப் பார்க்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications