Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai New Theme Park: சென்னையில் டிஸ்னி லேண்ட்..100 ஏக்கரில் தீம் பார்க் அமைக்கும் தமிழக அரசு.. பலே திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லேண்ட் பொழுது போக்கு பூங்கா போல சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் தனியார் உதவியுடன் கட்டமைக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் சார்பில் பல தீம் பார்க்குகள் உள்ளன. ஒரு நபருக்கு 500 முதல் 1000 வரை செலவாகும். சாமானிய மக்களால் தீம் பார்க் உள்ளே சென்று சுற்றிப்பார்க்க முடியாது. ஏழை எளிய மக்களின் பொழுது போக்கு சென்னையில் உள்ள கடற்கரைகள்தான். சென்னை புறநகர் பகுதிகளில் பொழுது போக்கு பூங்காக்கள் அதிகம் உள்ளன.

Tamil Nadu Government to set up theme park in Chennai says Tamil Nadu Tourism Policy

தமிழக அரசு சுற்றுலா துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கப்படும் என தமிழக அரசு சுற்றுலா கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் சுற்றுலாவுக்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலா தலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட "தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 ஐ வெளியிட்டார்.

சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் குறிப்பிடத்தக்க இயக்கியாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில்முனைவோர் என பரந்த அளவிலான திறன்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது.

ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழகத்தை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வலுவான அடித்தளத்தையும், மாறிவரும் காலங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு முன்னேறும் அணுகுமுறையையும் உறுதி செய்யும் வகையில் ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆய்வின் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்கள், சுற்றுலாத் தொழிலில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுலா வல்லுநர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023ன் சிறப்பம்சங்கள்: தொழில் அந்தஸ்து: இந்தக் கொள்கையானது சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது.

முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்: சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும். அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும்.

தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள், முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம், மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம், பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. தனியார் பங்களிப்புடன் ஐந்து ஆண்டுகளில் தீம் பார்க் திட்டம் செயல்படுத்தப்படும். அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லேண்ட் தீம் பார்க் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோ போன்று தீம் பார்க் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுற்றுலா கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது,அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, 100 ஏக்கரில் ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, பாரம்பரியமிக்க கோவில்கள் மற்றும் சிறந்த கட்டிட கலை ஆகிய சிறப்பம் சங்களை கொண்ட ஆன்மீக சுற்றுலா தலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மாமல்லபுரம் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் நாட்டின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் பள்ளி அறிந்து கொள்ளும் வகையில் ஒரே இடத்தில் அவற்றை விளக்கும் வகையில் பிரமாண்ட ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை அருகே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெம்மேலி பகுதியில், ஆன்மிக கலாச்சார பூங்கா அமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அதற்கான ஒப்பந்தபுள்ளியும் கோரப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு 100 ஏக்கரில் சென்னை புறநகர் பகுதியில் தீம் பார்க் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+