ஹோட்டல்களில் தரமற்ற உணவா? நீங்களே புகார் அளிக்கலாம்.. "வாட்ஸ்அப்" எண்ணை வெளியிட்ட சுகாதாரத்துறை
சென்னை: ஹோட்டல்களின் கிச்சன்களில் அடிக்கடி தரமற்ற உணவுகளை பயன்படுத்துவதாக புகார்கள் வரும் நிலையில், உணவு தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 'வாட்ஸ் அப்' எண்ணை வெளியிட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் போது மக்களின் உணவு தேவையை தீர்த்து வைப்பதில் ஹோட்டல்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வெளியூர்களில் இருந்து தங்கியிருக்கும் பல பேச்சுலர்களுக்கு ஹோட்டல் உணவுதான் மூன்று வேளையும் பசியாற்றுகின்றன என்று சொன்னால் மிகையல்ல.. ஆனால், சமீப காலமாக ஹோட்டல்களில் தயாரிக்கும் உணவு தரமானதாகத்தான் உள்ளதா?

என வாடிக்கையாளர்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன. ஏனெனில் அவ்வப்போது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தும் போது ஹோட்டல்களின் கிச்சனில் கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக வரும் புகார்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் தான் உணவு தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 'வாட்ஸ் அப்' எண் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் முதல் உணவுகளின் தரம் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட நியமன அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. எளிதில் கெட்டுபோகக்கூடிய உணவுகளான சவர்மா, இறைச்சி வகைகள் உள்ளிட்ட உணவுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, 572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு தரம் குறைவான உணவு பொருட்களை வைத்திருந்த 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மொத்தம் ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. உணவின் தரத்தை உறுதி செய்யும் விதமாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் உணவின் தரத்தை அனைத்து உணவு வணிகர்களும் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று உணவின் தரம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் ஆப் மூலமாகவும், 94440 42322 என்னும் 'வாட்ஸ் அப்' எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications