எஸ்.பி.வேலுமணியை கைது செய்தது அராஜக செயல் - கொந்தளிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: எஸ்.பி. வேலுமணியை கைது செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் அராஜக செயல் என்றும் கோவைக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோயமுத்தூருக்கு சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர். இந்த ரவுடிகளால் தேர்தலின் போது பிரச்சனை ஏற்படலாம். கோயமுத்தூருக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டிருந்தார்.

அதோடு நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்று இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டார். எஸ்.பி.வேலுமணியின் கைதுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கைது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், ''எஸ்.பி.வேலுமணி ஜனநாயக ரீதியில் போராடினார். அவரை கைது செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் அராஜக செயல். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஒரு சார்பு தன்மையுடன் இருக்கிறது. கோவைக்கு துணை ராணுவ படை வேண்டும்''
என்று தெரிவித்துள்ளார்.
திமுகவினர் ரவுடிகளை இறக்கி பூத்களை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாகவும், அதை தடுக்க துணை ராணுவத்தினர் பாதுகாப்பிற்கு வர வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
''தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ள பதட்டமான மற்றும் மிக பதட்டமான வாக்குசாவடி மையங்களில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். 100 மீட்டருக்குள் வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். வாகனங்கள் செல்ல காவல்துறை அனுமதிக்க கூடாது. அந்தந்த பூத்துக்கான ஏஜெண்ட் மட்டுமே வாக்குசாவடி மையங்களில் அனுமதிக்க வேண்டும்.
கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 89 இடங்களில் மறு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், அந்த நிலைமை இந்த முறை ஏற்பட கூடாது, துணை ராணுவத்தினரை பாதுகாப்புக்காக தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்'' என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications