வீக் எண்டில் சொந்த ஊர் போறீங்களா! கிளாம்பாக்கத்தில் பஸ்சுக்கு திண்டாட வேணாம்! தமிழக அரசு குட் நியூஸ்
சென்னை: வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து நெல்லை, மதுரை என பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், கோவை, சேலத்துக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதில் அதிகம் பேர் சொந்த ஊர் செல்வதால் ரயில், பஸ்களில் கூட்டம் அலைமோதும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

585 சிறப்பு பஸ்கள்: அந்த வகையில், வரும் 28 ஆம் தேதி 265 பஸ்களும், 29 ஆம் தேதி 320 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
28/06/2024 (வெள்ளிக்கிழமை) 29/06/2024 (சனிக்கிழமை) 30/06/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/06/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 265 பேருந்துகளும், 29/06/2024 (சனிக்கிழமை) 320 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28/06/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 29/06/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து: மேலும். வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 28/06/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் 29/06/2024 (சனிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
மொபைல் ஆப்: இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4,234 பயணிகளும் சனிக்கிழமை 1,930 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 4,179 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கண்காணிக்கப்படும்: இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications