எய்ம்ஸ் போன்ற பிரம்மாண்ட மருத்துமனை கட்ட கால தாமதமாகலாம்.. சொல்கிறார் தமிழிசை சவுந்திரராஜன்!
எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கால தாமதமாகலாம் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனை என்பது ஐந்து அல்லது 7 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கிடையாது என்றும், எய்ம்ஸ் போன்ற பிரம்மாண்ட மருத்துவமனை கட்ட கால தாமதம் ஆகலாம் என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டதால், தென் மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் இதுவரை அடிக்கல் நாட்டிய பின், சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஒற்றை செங்கலை கடந்து இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

மதுரை எய்ம்ஸ்
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாததால், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆர்டிஐ மூலம் தெரிய வந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக ரூ.1,977.8 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில், வெறும் ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எய்ம்ஸ் பணிகள்
அதேபோல் கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்று ஆர்டிஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2026ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் என்று பதில் அளிக்கப்பட்டது. இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து திமுக, விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதமாவது தொடர்பாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியுள்ளார். சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். இந்த விழாவில் தமிழிசை சவுந்திரராஜன் பேசுகையில், ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறதா, காது இருக்கிறதா என்று தெரியாது. ஆனால் இதயம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

கால தாமதமாகலாம்
தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி தமிழிசை சவுந்திரராஜன் பேசுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை என்பது ஐந்து அல்லது 7 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கிடையாது. எய்ம்ஸ் போன்ற பிரம்மாண்ட மருத்துவமனை கட்ட கால தாமதம் ஆகலாம் என்று தெரிவித்தார். அதேபோல் மக்கள் அனைவரும் யோகா செய்தால் மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை என்றும், தயவு செய்து யோகா செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications