தமிழகத்தில் கிடுகிடு.. இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று.. 21 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக 1685 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34914 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 10வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக 1500ஐ கடந்துள்ளது. இன்று 1685 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்குள் மட்டும் 1649 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் ஒரு நாளில் 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24545 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டில் 158 பேர், காஞ்சிபுரத்தில் 32 பேர், மதுரையில் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 90 பேர், திருவண்ணாமலையில் 16 பேர், வேலூரில் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலியில் தலா 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 5 பேர், அரியலூரில் 3 பேர், திண்டுக்கல்லில் 6 பேர், நாகப்பட்டினத்தில் 7 பேர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், தருமபுரி, பெரம்பலூர், கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், தேனியில் தலா 2 பேர், தஞ்சாவூரில் 8 பேர், திருச்சியில் 4 பேர், திருவாரூரில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணம் அடைந்தவர்கள்
தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 8ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 18325 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 16,279 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 12,570 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மிக அதிகமான சோதனை
ஜூன் 8ம் தேதியான இன்று மட்டும் 13,219 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 6,21,171 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இதுவரை இன்று மட்டும் 12,421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 5,93,189 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனாவால் மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 15 அரசு மருத்துவமனையிலும், 6 தனியார் மருத்துவமனையிலும் ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 21 பேரில் சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் கொரோனாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 6ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 8ம் தேதி கடுமையான சுவாச பிரச்னையால் உயிரிழந்தார். நேற்று முன்தினம் 20 வயது கர்ப்பிணி பலியான நிலையில் நேற்று 22 வயது இளம் வயது நபர் பலியாகி இருந்தார். எந்த பிரச்னையும் இல்லாதவர்களும் உயிரிழப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆண் பெண் விவரம்
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,685 பேரில் 1,091 பேர் ஆண்கள், 594 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 34,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21,666 பேர் ஆண்கள், 13,231 பேர் பெண்கள், 17 பேர் திருநங்கைகள் ஆவர். ஜூன் 9ம் தேதி நிலவரப்படி 16,279 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 77 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 44 அரசு மருத்துவமனையில் உள்ளது. 33 தனியார் மருத்துவமனையில் உள்ளது.












Click it and Unblock the Notifications