திருவொற்றியூரில் பெண் வியாபாரி கொலை..ரவுடிகள் அட்டூழியம்! தமிழக அரசின் மெத்தனப்போக்கு..பறந்த கண்டனம்
சென்னை: சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை சம்பவத்தில் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே கௌரி என்பவர் சன்னதி தெருவில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அவரது கணவர் மாரியுடன் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பர்மா சேகர் என்பவர் மது போதையில் கௌரியிடம் மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என கௌரி கூறியதால் பர்மா சேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கௌரியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
மேலும் கொலையை தடுக்க வந்த கௌரியின் கணவர் மாரிக்கும் கத்தி குத்து விழுந்தது இதை எடுத்து அப்பகுதி மக்கள் பர்மா சேகரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழல் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளன.
அதே நேரத்தில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரவுடிகளை ஒழிப்பதில் காவல்துறை தோல்வி அடைந்து விட்டதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரியை மாமுல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிகரித்துவரும் ரவுடிகள் கலாச்சாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சற்று நேரத்திற்கு முன்பாக கூட சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடிய சம்பவமும் நடந்தேறியுள்ளது.
எனவே, இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். " என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications