மத்திய அரசின் இந்தி திணிப்பு, நிதி தர மறுப்பை திமுக-பாஜகவின் "நாடகமாக" மடைமாற்றி கிண்டலடித்த விஜய்!
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழி திணிப்பதையும் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி தர மறுப்பதையும் பாஜக- திமுகவின் பெயரை சொல்லாமலேயே 'நாடகமாடுகிறார்கள்' என கிண்டலடித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மடைமாற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 40 லட்சம் பிஞ்சு குழந்தைகளின் கல்வியை காவு வாங்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, கல்விக்கான நிதியை தர மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை கொண்ட புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால்தான் நிதியை தருவோம் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறுகிறது. ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கையே இந்தி மொழியை திணிக்கக் கூடியதுதான்... நீங்கள் ரூ.10,000 கோடியே கொடுத்தாலும் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க முடியாது என வீதிகள், வீடுகள் தோறும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பாஜக தவிர அதன் கூட்டணி கட்சிகளும் கூட பாஜக அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கின்றன. தமிழ்நாட்டில் மத்திய அரசின் இந்த போக்குக்கு எதிராக தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யும் இதுவரை ட்விட்டர் பதிவுகள் மூலம் எதிர்ப்பை தெரிவித்து வந்தார். இன்றைய மாமல்லபுரம் தவெக 2-வது ஆண்டு தொடக்க விழாவில் இந்த விவகாரம் தொடர்பாக ஆணித்தரமாக நடிகர் விஜய் பேசுவார் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தையே ஏதோ ஒரு நாடகம் போல கிண்டலடித்துவிட்டு விஜய் மடைமாற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நடிகர் விஜய் பேசியது என்ன?
மும்மொழிக் கொள்கை திணிப்பு தொடர்பாக இன்றைய மாநாட்டில் விஜய் பேசியதாவது: இப்ப புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டிருக்காங்க.. மும்மொழிக் கொள்கை.. அதாவது மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை எனில் கல்விக்கான நிதியை நம்முடைய மாநில அரசுக்கு கொடுக்கமாட்டார்களாம்.
இது எல்கேஜி, யூகேஜி பசங்க சண்டை போட்டுக்கிற மாதிரி இருக்கு.. கொடுக்க வேண்டியது அவங்களோட கடமை; கேட்டு பெறவேண்டியது இவங்க உரிமை.. ஆனால் இவங்க இரண்டு பேரும் எவ்வளவு சீரியசா ஒரு பிரச்சனை ஓடிகிட்டு இருக்கு.. இவங்க என்ன பண்றாங்கன்னா.. ரெண்டு பேரும் அதாவது நம்ம பாசிசமும் பாயாசமும்.. அதான் நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும்.. பேசிவச்சிகிட்டு.. செட்டிங் எல்லாம் பண்ணிகிட்டு மாற்றி மாற்றி ஹேஷ்டேக் போட்டு விளையாடிகிட்டு இருக்காங்க.. இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு?
இவங்க இரண்டு பேரும் அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்குவாங்களாம்.. அதை நாங்க வந்து நம்பனுமாம்.. மக்கள் நம்பனுமாம்? What Bro.. Very Wrong Bro...
இதை எல்லாம் மக்களுக்கு புரிய வைக்கணும் அவசியமே இல்லை.. அவங்களுக்கே தெரியும்.. இது எல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது. பொய் பிரசாரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நாமும் இதனை எதிர்ப்போம். இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications