2026 எவ்வளவு டஃப்னு தெரியும்..நம்ம டார்க்கெட்டே வேற! மிக தெளிவாய் காய் நகர்த்தும் தவெக தலைவர் விஜய்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய். அதே நேரத்தில் 2026 நிச்சயம் போராட்டமாக தான் இருக்கும் வரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரது திட்டம். இதற்காக கட்சியில் இளைஞர்களை அதிகமாக சேர்ப்பது, அவர்களுக்கு பதவி கொடுப்பது என திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரை உலகின் நம்பர் ஒன் நடிகராக வருபவர் விஜய். 2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழில் அதிக வசூல் செய்தது அவரது 'தி கோட்' திரைப்படம் தான். அந்த அளவுக்கு விஜய் படம் என்றாலே 300 கோடி 400 கோடி நிச்சயம் வசூலிக்கும் என்ற நிலை இருக்கிறது.

இப்படி தனது சினிமா வாழ்வின் உச்சத்தில் இருக்கும்போதே அதனை விட்டு விலகி அரசியலை குறிக்கப் போகிறேன் என விஜய் அறிவித்தார். சொன்னது மட்டும் இல்லாமல் அதனை செய்தும் காட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்ததோடு, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள், ஆலோசனைகள்,மாணவர் சந்திப்பு, சினிமா சூட்டிங் என பிசியாக இருந்த விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தி காட்டினார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது வரை அந்த மாநாடு குறித்த பேச்சு தான் தமிழகத்தில் பேசப்படுகிறது. மேலும் எடுத்த எடுப்பிலேயே பாஜக, திமுகவுக்கு எதிராக தனது அரசியல் இருக்கும் என கூறியது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் பேச்சு தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து திமுக, விசிக, நாம் தமிழர், அதிமுக போன்ற கட்சிகள் தினமும் விஜய் குறித்து பேசி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என விஜய் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். கட்சியில் அதிகாரப்பூர்வமாக இன்னும் மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு வரவில்லை. இதை அடுத்து தங்களுக்கு பதவி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல இளைஞர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். கட்சியில் பதவிகளுக்கு ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஒரு புறம் விமர்சனங்கள் இருந்தாலும் ரசிகர் மன்றத்தினருக்கும், புதிதாக சேர்பவர்களுக்கும், ஏற்கனவே வேறு கட்சியில் இருந்து வருபவர்களுக்கும் சம முக்கியத்துவம் தர வேண்டும் என விஜய் விரும்புகிறார்.
தற்போது இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்று ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். அதில் ஒரு மாவட்டத்திற்கு ரசிகர் மன்ற நிர்வாகி என்றால், மற்றொரு மாவட்டத்திற்கு வேறு கட்சியிலிருந்து வந்தவர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் இன அனைவருக்குமே முக்கியத்துவம் தர திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்ட துணை செயலாளர் பதவியை பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சீனியர்களுக்கும் வழங்க திட்டமிட்டு இருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றாலும், வெற்றிக்கனியை ஏற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பது விஜய்க்கு தெரியும். ஏற்கனவே களத்தில் பலமாக இருக்கும் அதிமுக திமுக என்ற இரு யானைகளை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் கிடையாது என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார். அவரை பொறுத்தவரை வரும் காலத்தில் 2031, 2036 சட்டமன்றத் தேர்தல்கள் தான் தனது டார்கெட், அதற்காக இளைஞர்களை தற்போது தயார் செய்து களத்தில் இறக்க வேண்டும், அதை நோக்கியே தனது பயணம் இருக்க வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதை நோக்கி விஜயின் நடவடிக்கைகளும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications