மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி இது.. உண்மையாக உழைக்க வேண்டும்.. நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி மக்களுக்கானது என்று அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். தவெகவில் 2ஆம் கட்டமாக நிர்வாகிகளை நியமித்துள்ள விஜய், கட்சியினர் அனைவரும் மக்களின் நலனுக்காகவே செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இதன்பின் பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்தார். இதனால் விஜய்-ன் அரசியல் செயல்பாடுகள் மீது பலரின் கவனமும் குவிந்துள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு நிறைவு விழா விரைவில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக நடிகர் விஜய் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் முதலாமாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு எடுத்துள்ளார்.
ஏற்கனவே தவெக தரப்பில் தமிழ்நாடு மொத்தமாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தன் முகம் பொதித்த வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பனையூரில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், மக்களுக்காக இந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காகவே நிர்வாகிகள் செயல்பட வேண்டும். மக்கள் இயக்கமாக இருந்த நேரத்தில் நீங்கள் நன்றாக பணியாற்றி வந்தீர்கள். தற்போது உங்களை நம்பியே கட்சியை தொடங்கியுள்ளேன்.
கட்சிக்கு அனைவரும் உண்மையாக, நேர்மையாக உழைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதை விடவும் இனி வரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து சென்னை புறநகர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் வாரியாக 19 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications