தவெக ஆர்ப்பாட்டம்.. பேனர், ஹெல்மேட், முழக்கம், உருவபொம்மை.. தொண்டர்களுக்கு விஜய் போட்ட 12 உத்தரவு!
சென்னை: திருப்புவனம் அஜித் குமார் காவல் மரணத்தை கண்டித்து தவெக சார்பாக நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க வரவுள்ள தொண்டர்கள், பின்பற்ற வேண்டிய 12 விதிகளை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
திருப்புவனம் அஜித் குமார் காவலதுறையினரின் மோசமான தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இதனை கண்டித்து தவெக சார்பாக நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால், அக்கட்சி தொண்டர்கள் கூடுதல் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் 16 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

12 உத்தரவு
தவெக சார்பாக 6 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பங்கேற்க உள்ள ஆர்ப்பாட்டம் என்பதால், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு வரவுள்ள தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய 12 விதிகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
எத்தனை மணிக்கு ஆர்ப்பாட்டம்?
அதன்படி, ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10.00 மணிக்கு தொடங்க இருப்பதால், அதற்குத் தகுந்தார்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நாம் ஒன்றுகூட வேண்டும். எனவே, அனைவரும் தங்களது வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா சாலையை அடைய வேண்டும்.
வாகனங்களை நிறுத்துவது எங்கே?
அதேபோல், ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசை வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வர வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
தலைக்கவசம் முக்கியம்
தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரும் வகையில் வழி விட்டு ஒத்துழைப்பு தந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அதேபோல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
முழக்கங்களில் கவனம்
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள். பதாகைகள் வைக்கக் கூடாது, எந்த ஒரு மத. சாதி. இன மற்றும் தனிப்பட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது, தனிப்பட்ட அதிகாரிகள் மீதும், ஆட்சேபகரமான முறையிலும் பேசுதல் மற்றும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது.
அரசு மருத்துவமனை
அதேபோல் ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகளைக் கொண்டு வருவது. அவற்றை எரிப்பது, புகைப்படங்களை எரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருப்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
தொண்டர்கள் பாதுகாப்பு
தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும், எவ்வகையிலும் கழகத்தின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராகக் கண்டிப்பாகச் செயல்படக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை தவெக தொண்டர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications