அப்போ கிரீஸ்.. இப்போ தகரம்! விஜய் நிகழ்ச்சியில் ரசிகர்களை தடுக்க தவெக கையாளும் புதிய பிளான்
சென்னை: காஞ்சிபுரத்தில் உள் அரங்கு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, நிகழ்ச்சி நடைபெறும் ஜேப்பியார் கல்லூரி வளாகத்திற்குள் ரசிகர்கள் அத்துமீறி நுழையக் கூடாது என்பதால் கல்லூரியை சுற்றி தகரம் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தவெக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தனது மக்கள் சந்திப்பு பயணத்தை நிறுத்தி வைத்தார். கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தால் விஜய் மிகவும் மனம் உடைந்து போனதாக சொல்லப்பட்டது.

விஜய் மீண்டும் பிரசாரம்
கிட்டத்தட்ட ஒரு மாதமாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத விஜய், கடந்த மாதம் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பிறகு, சமீபத்தில் தவெகவின் சிறப்பு பொதுக்குழு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விஜய், திமுகவை கடுமையாக அட்டாக் செய்தார்.
சிறப்பு பொதுக்குழு முடிந்த பிறகு விஜய் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள், சேலம் காவல் மாநரக ஆணையரை சந்தித்து விஜய், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி பங்கேற்கும் பிரசார கூட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஆனால், இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
காஞ்சிபுரம் வரும் விஜய்
கார்த்திகை தீபம் மற்றும் பாபர்மசூதி இடிப்பு தினம் வருவதால், வேறு ஒரு தேதியை தேர்வு செய்யுமாறு தவெகவினரை போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் நாளை காஞ்சிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்கி அவர்களை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் உள்ள உள் அரங்கத்தில் பொதுமக்கள் சுமார் 2000 பேரை விஜய் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடுகிறார்.
காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்க வரும் பொதுமக்கள் சிறப்பு வாகனங்களில் அழைத்து வரப்படுகின்றனர். நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார்.
2 ஆயிரம் பேருடன் கலந்துரையாடுகிறார்
காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்க இருக்கின்றனர். மக்கள் சந்திப்புக்கு சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் முறைப்படி அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள சூழலில், உள் அரங்கில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புஸ்சி ஆனந்த் நேற்று இரவில், ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். நாளை நடைபெற இருக்கும் விஜய் மக்கள் சந்திப்பில் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இரும்பு தகரம் அமைப்பு
மக்கள் சந்திப்பு நடைபெறும் கல்லூரியின் முன்பகுதியில் வெளிநபர்கள் நுழைவதை தடுக்க இரும்புத் தகடுகள் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் யாரும் அத்துமீறி உள்ளே நுழையக் கூடாது என்பதற்காக ஜேப்பியார் கல்லூரியை சுற்றி இடைவெளி இருக்கும் பகுதிகளில் தகரம் அடித்து அடைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இரும்பு கம்பிகளில் கிரீஸ்
முன்னதாக தவெக மதுரை மாநாட்டில், விஜய் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு ரேம்ப் வாக்கில், இடையூறு ஏற்படாமல் இருக்க, சில அடிகள் தள்ளி இரும்புகம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இரும்புக்கம்பிகளில், தவெக தொண்டர்கள் ஏறிவிடக்கூடாது என்பதற்காக கிரீஸ் தடவப்பட்டது. ஆனால் அதனையும் மீறி, தவெக தொண்டர்கள் சிலர் ரேம்ப் வாக்கில் ஏறியதையும் அவர்களை பவுன்சர்கள் தூக்கி வீசிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications