ஆணவக் கொலை முதல் திருப்பரங்குன்றம் வரை.. விஜய் வாய் திறக்காமல் இருந்த முக்கிய அரசியல் சம்பவங்கள்!
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், விஜய் இதுவரை எந்தெந்த முக்கிய சம்பவங்களுக்கு வாய் திறக்காமல் அமைதி காத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத விஜய், 2026 சட்டசபைத் தேர்தல் மட்டுமே இலக்கு என்று அறிவித்தார். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சனைகள் தொடர்பாக விஜய் அறிக்கையை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இருந்தாலும் விக்கிரவாண்டி மாநாடுக்கு பின் விஜய் தன்னுடைய அரசியலை வேகப்படுத்தினார். தமிழ்நாடு முழுக்க தவெகவுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்த விஜய், மதுரையில் பிரம்மாண்டமாக 2வது மாநில மாநாட்டை நடத்தினார். இதற்கிடையே சில நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் நேரடியாக பங்கேற்றார். குறிப்பாக ரமலான் நோன்பு நிகழ்ச்சி விஜய் பங்கேற்றதால் முக்கியத்துவம் பெற்றது.
இதனால் இஸ்லாமியர்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாக அக்கட்சியினர் கூறி வந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 3 வாரங்கள் தொடர்ந்து 2 மாவட்டங்களாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனிடையே கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் விஜய்யின் பிரச்சாரத்திற்கு தடையாக மாறியது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் தொடர்பாக விஜய் அமைதி காப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு பின் விஜய் வீடியோவை வெளியிட்டார். அப்போதும் கூட பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காத விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் அழைத்து வந்து சந்தித்தார்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்ட ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலைக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தீவிரமாக குரல் கொடுத்த சூழலில், விஜய் ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. இது தவெக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்தது. தற்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியோ அமைதி என்று இருந்து வருகிறார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றோ, ஏற்றக் கூடாது என்றோ விஜய் இதுவரை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் தவெக தொண்டர்கள் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே புரியாமல் குழம்பி இருக்கின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த போது வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட திமுகவை 13 முறை விஜய் குறிப்பிட்டிருந்தார். '
ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்தோ, ஆதரித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. விஜய்யின் இந்த அமைதி மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் விஜய் இந்த விவகாரம் குறித்தெல்லாம் அந்தந்த மாவட்டங்களில் பிரச்சாரத்திற்கு செல்லும் போதாவது பேசுவாரா என்று பலரும் கேட்க தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications