பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு விவகாரம்.. உரிய விளக்கமே இல்லையே! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மசோதா குறித்து பல்வேறு கருத்துக்கள் மேலெழுந்துள்ளன. "பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் உரிய விளக்கம் இல்லை" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நிகழ்வுகள் அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான நாளை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.

முதல் நாள் கூட்டத் தொடர் முடிந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் 81வது பிரிவில் திருத்தத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடம், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதல் முறையாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது.
ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டு முறை என 90களில் மொத்தம் 3 முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையில் தோல்வியடைந்தது.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அப்போது இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சூழலில் தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து இன்று புதிய நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் இதில் பல சிக்கல்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்தபின், மக்கள் தொகை/ மக்கள் அடர்த்தி அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுசீரமைத்து அதன்பிறகு 33% இட ஒதுக்கீட்டை கொண்டு வருவார்கள் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அம்சம்தான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது, தொகுதிகளை மறுசீரமைத்தால் உ.பி மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் அதிக தொகுதிகளை பெறும். தென் மாநிலங்கள் குறைந்த தொகுதிகளையே பெறும். மத்திய அரசை உருவாக்க அதிக தொகுதிகள் கொண்ட மாநிலங்கள்தான் தேவை. எனவே தென் மாநிலங்கள் மசோதாவின் இந்த அம்சத்தை எதிர்ப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இப்படி எதிர்ப்பதன் மூலம் மசோதா நிறைவேற்றப்படாமல் கூட போக வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளனர்.
இப்படி இருக்கையில், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மசோதா குறித்து பேசியுள்ளார். "பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவில் உரிய விளக்கம் இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்கிறார்கள். அதேபோல எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "கடந்த காலத்தில் ஐமுகூ அரசு பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடை உடனடியாக வழங்கியது போல அல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பிறகுதான் இதனை வழங்கும்.
எனவே இது 2029ம் ஆண்டு அமல்படுத்தப்படலாம். அந்த வகையில் இது மோடியின் மற்றொரு ஸ்டன்டாக அமையும். மேலும், OBC சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இந்த மசோதா கணக்கில் கொள்ளவில்லை. பெண்கள் இடஒதுக்கீட்டுடன், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications