உதயநிதி - மு.க.அழகிரி சந்திப்பு.. திருமங்கலம் ஃபார்முலாவை கேட்டிருப்பார்.. ஜெயக்குமார் விமர்சனம்!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். திருமங்கலம் ஃபார்முலாவை அமல்படுத்தி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து மு.க.அழகிரியிடம் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்திருக்கலாம் என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தீடீரென முன்னாள் மத்திய அமைச்சரும், பெரியப்பாவுமான மு.க.அழகிரி வீட்டிற்குச் சென்றார். உதயநிதி ஸ்டாலினை வெளியே வந்து வரவேற்ற அழகிரி குடும்பத்தினர், பின்னர் வீட்டில் வெகு நேரம் நேரம் பேசிக்கொண்டனர். இதனால் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.
இதனால் மு.க.அழகிரி மீண்டும் தீவிர அரசியலுக்குள் கால் பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் மரியாதை நிமித்தமான சந்திப்பாக கூறப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பேற்ற விழாவில், துரை தயாநிதி கலந்துகொண்டார். அதற்கு பின் பெரியப்பாவான மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றதாக திமுக வட்டாரத்தில் கூறப்பட்டது.

அதிமுக போட்டி
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மறைந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜெயக்குமார் பேட்டி
ஆனால் அதிமுகவே நேரடியாக களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு. அவர்களாக் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. மூன்று பேருக்கும் அதிமுகவின் கதவுகள் மூடப்பட்டுள்ளது. எந்த காலத்தில் அவர்கள் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

வேங்கைவயல்
தொடர்ந்து, வேங்கைவயல் விவகாரத்தில் 20 நாட்களுக்கு மேல் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. திமுக ஆட்சில் வன்முறையாளர்களுக்கு மென்மை கரமும், அதிமுகவினருக்கு இரும்புக் கரமும் கொண்டு ஒடுக்கப்படுகிறது. பேச்சில் இருக்கும் செயல்பாடுகள், செயலில் இல்லை என்று தெரிவித்தார்.

திருமங்கலம் ஃபார்முலா
பின்னர், முக அழகிரி - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு பற்றிய கேள்விக்கு, திமுக ஆட்சிக்கு வந்தபின் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்று மு.க.அழகிரியை சந்தித்துள்ளார். இது குடும்ப பாச உறவு தான். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 2009 திருமங்கலம் ஃபார்முலாவை அமல்படுத்தி ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து மு.க.அழகிரியிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications