ஆய்வில் குறுக்கு கேள்வி இல்லை! அதிகாரிகளை பேசவிட்டு ஆழமாக அப்செர்வ் செய்யும் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின் போது அதிகமாக குறுக்கு கேள்விகள் கேட்காமல், அதிகாரிகளை பேசவிட்டு அதை ஆழமாக அப்செர்வ் செய்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
எல்லாம் தெரிந்ததை போல் முந்திக்கொண்டு முதல்நாளே கேள்விகள் கேட்பதை விடுத்து, மிக விவரமாக விளையாட்டுத் துறையை கையாள தொடங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி.
இதனிடையே இன்னும் ஒரு மாத காலம் இப்படித் தான் அப்செர்வ் செய்வார், அமைதியாக இருப்பார் என்றும் அதன் பிறகு தான் சாட்டையை சுழற்றுவார் எனவும் கூறுகிறார்கள் அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள்.

அமைச்சர் உதயநிதி
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் நேற்று முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் தொடர்பான அந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறையின் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நடத்திட மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்தல் மற்றும் நிதி ஒதுக்கீடு, செலவினம் போன்றவை தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

ஆழமாக அப்செர்வ்
அப்போது அதிகாரிகளை சுதந்திரமாக பேசவிட்டு அவர்கள் அளித்த விளக்கங்களை ஆழமாக அப்செர்வ் செய்த உதயநிதி ஸ்டாலின், இடையே தனக்கு எழுந்த ஓரிரு கேள்விகளை மட்டும் கேட்டிருக்கிறார். மற்றபடி முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே தனது அதிகாரத்தை அவர் காட்ட விரும்பவில்லை. அறைக்குள் அமர்ந்து மட்டும் ஆய்வுக்கூட்டத்தை நடத்தி முடிக்காமல், நேரு உள் விளையாட்டரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்சிகிச்சை நீச்சல் குளம், ஸ்குவாஷ் உள் விளையாட்டரங்கம் மற்றும் 400 மீட்டர் செயற்கை ஓடுதளம், இயற்கை புல் கால்பந்து மைதானம் ஆகியவற்றை நேரில் சென்று உதயநிதி பார்வையிட்டார்.

மிகவும் கூலாக
தனது தாத்தா கருணாநிதியை போலவே மிகவும் கூலாக ஆய்வுக் கூட்டத்தின் போது அமைச்சர் உதயநிதி காணப்பட்டிருக்கிறார். எப்படி பேசுவாரோ, என்ன கேட்பாரோ என பதைபதைப்பில் இருந்த அதிகாரிகளும், அலுவலர்களும் உதயநிதியின் அணுகுமுறையை கண்டு வியந்துள்ளனர். இதனிடையே இன்னும் ஒரு மாத காலம் தான் இப்படி அப்செர்வ் செய்வார், அமைதியாக இருப்பார் என்றும் அதன் பிறகு தான் சாட்டையை சுழற்றுவார் எனவும் கூறுகிறார்கள் அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள்.

ஆய்வு நடத்த
துறை ரீதியான செயல்பாடுகள், நடவடிக்கைகள் பற்றி முழுமையாக அறிந்த பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுகும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்த செல்வார் என எதிர்பார்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications