தெற்காசியாவிலேயே முதல் முறை.. இனி தமிழ்நாடு ‘டாப்’ லெவல்.. ஃபார்முலா 4 கார் ரேஸ் பற்றி உதயநிதி!
சென்னை: தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடந்து வருகிறது. 3.8 கி.மீ தூரம் கொண்ட ஃபார்முலா 4 கார் ரேஸ் சர்க்யூட்டில் இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஃபார்முலா 4 கார் ரேஸ், உலகளவில் இந்தியாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செஸ் ஒலிம்பியாட் உள்பட தமிழ்நாட்டில் சர்வதேச போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தய போட்டியை நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டிருந்தது.

கடந்த டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கார் ரேஸ், இன்று தொடங்கியது. சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலை சுற்றிலும் 3.8 கிமீ நீளமுள்ள சர்க்யூட்டில் இந்த கார் ரேஸ் நடக்கிறது. இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா 4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் ரேஸ் நடப்பது இதுவே முதல் முறை.
FIA சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கார் ரேஸ் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் இன்று ஏற்பட்டது. கடைசி நேரத்தில் FIA அனுமதி கிடைத்து ஃபார்முலா 4 ரேஸ் தாமதமாக தொடங்கியது. புதிய அட்டவணை வெளியிடப்பட்டு, 7 மணிக்கு கார் ரேஸ் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து, பயிற்சி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண சிவானந்தா சாலை, மன்றோ சிலை, தீவுத்திடல் ஆகிய இடங்களில் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஃபார்முலா 4 கார் ரேஸ் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற Formula 4 Chennai Racing on the Street Circuit-ஐ சென்னைத் தீவுத்திடலில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.

அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி - முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் - கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்.
முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி." எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications