குட் நியூஸ்.. இனி நீங்களும் பிரிட்டன் பல்கலை சான்றிதழ் பெறலாம்.. சென்னை ஐஐடி.யில் புதிய வசதி!
சென்னை: சென்னை ஐஐடி மற்றும் இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து முதுகலை திட்டத்தை (masters' programme) உருவாக்க முன் வந்திருக்கின்றன. இதன்படி தற்போது இரு கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் சென்னை ஐஐடியில் குறிப்பிட்ட துறைகளில் முதுகலை பயில்பவர்கள் 'பர்மிங்காம்' பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கெனவே இது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

புரிந்துணர்வு
இங்கிலாந்தில் இயங்கி வரும் நூற்றாண்டு பழமையான பர்மிங்காம் பல்கலைக்கழகம் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள முயன்று வந்தது. இதன் நோக்கம் இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் முதுகலை கல்வியை கற்பிப்பதாகும். இவ்வாறு இந்திய கல்வி நிலையங்களின் வழியாக கற்றாலும் இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்படும். இது குறித்து சமீபத்தில் சென்னை ஐஐடியுடன் இங்கிலாந்து பல்கலைக்கு உடன்பாடு புரிந்துணர்வு ஏற்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்து
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இரு கல்வி நிலையங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. அதன் பின்னர் சென்னை ஐஐடியில் முதுகலை திட்டத்தை உருவாக்க இரு கல்வி நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டன. இந்த முயற்சிகள் பலனளித்துள்ளதன் விளைவாக தற்போது இரு கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆடம் டிக்கெல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

நிதி
இந்த ஒப்பந்தத்தின்படி தரவு அறிவியல்(Data Science), ஆற்றல் அமைப்புகள்(Energy Systems) மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்(Biomedical Engineering) ஆகிய துறைகள் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் செயல்படும். இதனைத் தொடர்ந்து மேலும் சில துறைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடங்கப்படும். இதனை செயல்படுத்துவதற்கு இரு கல்வி நிறுவனங்கள் தரப்பிலும் கூட்டாக நிதி ஒதுக்கப்படும். மற்ற துறைகளில் பயில்வதற்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றனவோ அதே சலுகைகள் இந்த துறையில் பயிலும் மானவர்களுக்கு வழங்கப்படும்.

தலைசிறந்த பல்கலைக்கழகம்
பர்மிங்காம் பல்கலைக்கழகம் என்பது உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். அதேபோல பிரிட்டனில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இது 12வது இடத்தில் இருக்கிறது. இப்படியான பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்கள் இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு சர்வதேசிய பார்வையை வழங்கும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல தலை சிறந்த பல்கலைக்கழகத்தின் பட்டியலில் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்கள் இதேபோல இந்தியாவின் கல்வியை தொடங்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications