"ரூ.10 கோடி" மீனவருக்கு மத்திய அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும்.. ராஜ்நாத் சிங்கிற்கு சு.வெ கடிதம்!
சென்னை: கேரள மீனவர்களுக்கு இத்தாலி அரசு ரூ.10 கோடி வழங்கியது போல் மத்திய அரசு மயிலாடுதுறை மீனவருக்கு இழப்பீடு தர வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தைச் சோ்ந்த ஏழு மீனவா்கள், காரைக்காலைச் சோ்ந்த மூன்று மீனவா்கள் என மொத்தம் 10 மீனவா்கள் தெற்கு மன்னாா் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ஐஎன்எஸ் பங்காராம் என்ற கப்பலில் வந்த இந்திய கடற்படையினா் சந்தேகத்தின் பேரில் துப்பாக்கியால் சுட்டதில் வீரவேல் என்ற மீனவா் மீது குண்டுபட்டது.

தமிழக மீனவர் படுகாயம்
மீனவர் வீரவேலுக்கு துப்பாக்கி குண்டுகளால், தொடை மற்றும் அடி வயிற்றில் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். தமிழக மீனவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினா் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவா்கள் வலியுறுத்தினா். இதனிடையே இதனிடையே இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இந்திய கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், இந்திய கடற்படையினரிடன் செயல் மிகுந்த வருத்தத்துக்குரியது. இந்திய கடற்பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமை நிதானத்துடன் கையாள வேண்டும். இந்திய பாதுகாப்புப்படை நிதானத்துடன் செயல்பட வேண்டும். இதற்காக இந்திய கடற்படைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சு.வெங்கடேசன் கடிதம்
தொடர்ந்து இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இழப்பீடு வழங்குக
அந்த கடிதத்தில் மீனவர் வீரவேல் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இந்திய கடற்படை பொறுப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆதார் கார்டை காட்டிய பிறகும் மீனவர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், கேரள மீனவர்களுக்கு இத்தாலி அரசு ரூ.10 கோடி வழங்கியதுபோல் இந்திய அரசு மயிலாடுதுறை மீனவருக்கு இழப்பீடு தர வேண்டும் என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications