தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்? இன்று சென்னை வரும் கிஷன் ரெட்டி.. 4 நாளில் வெளியாகும் அறிவிப்பு
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வரவுள்ள நிலையில், புதிய தலைவர் தொடர்பான அறிவிப்பு அடுத்த 4 நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் கட்சி விதிகளின்படி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாநில தலைவர் தேர்வு செய்யப்படுவர். அதேபோல் ஒரு நபருக்கு 2 முறை மட்டுமே தலைவர் பதவி வழங்க முடியும். அதற்கேற்ப மாநில தலைவர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்ய பாஜக தலைமை தரப்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பின், பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். சீனியர்கள் பலரும் இருந்த போதும், இளம் தலைவரான அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த பாஜக, ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலையின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், அடுத்த தலைவராக யார் கொண்டு வரப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே பாஜக மாவட்டத் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வரவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் 2 நாட்கள் ஆலோசனை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன்பின் பாஜக மாநில தலைவர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் தேசிய தலைமை தரப்பில் ஒருவர் தலைவராக அறிவிக்கப்படுவார்கள். இதுதொடர்பான அறிவிப்பு 4 நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே இருக்கிறது.
இதனால் பாஜக புதிய தலைவராக அண்ணாமலை மீண்டும் நியமனம் செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் சீனியர்களான தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அடுத்த பாஜக தமிழக தலைவருக்கான போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications