மக்களே ரெடியா.. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போது? வெளியான தகவல்
சென்னை: பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அண்மையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் 12, 13 தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, உதவி தேர்தல் அதிகாரிகள் பேரூராட்சிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பயிற்சி
அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, பொது வார்டு, எஸ்.சி., எஸ்.டி., வார்டுகளும் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வார்டு வாரியாக
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வார்டு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்கள் தங்களது பெயர் எந்த வார்டு, எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.

வாக்காளர் பட்டியல்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் மாநிலம் முழுவதும் வெளியிடப்பட்ட நிலையில் சமீபத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்படவில்லை.

மதுரை
சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் தான் வாக்காளர் பட்டியல் வெளியானது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் வார்டு பிரிக்கும் பணிகள் முடிவடையாததால் அங்கு வாக்காளர் பட்டியல் வெளியாகவில்லை. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மாங்காடு, நந்திவரம்- கூடுவாஞ்சேரி, குன்றத்தூர், பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய நகராட்சிகளுக்கான எல்லை நிர்ணயம் இன்னும் முடிவடையாததால் அங்கும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியாகவில்லை.

தேர்தல் எப்போது
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன. எனவே புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு தொகுதி வரையறை பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications