தூத்துக்குடியை துடைத்தெறிந்த டிரம்ப்.. அமெரிக்காவின் அடாவடி வரியால் கடும் பாதிப்பு.. என்ன நடக்கிறது?
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க உள்ளது. தூத்துக்குடியில் உள்ள 15 நிறுவனங்கள் உள்பட தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 25 நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை அனுப்பும் நிலையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை எதிர்நோக்கி உள்ளன. கூடுதல் வரியை செலுத்த முடியாமல் பல நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான சப்ளையை நிறுத்தும்.

ஒருவேளை கூடுதல் வரி செலுத்தி அமெரிக்காவில் நம் நாட்டு பொருட்களை அனுப்பினால் அதன் விலை அதிகரிக்கும். கூடுதல் விலை கொடுத்து மக்கள் நம் நாட்டின் பொருட்களை வாங்கவும் யோசிப்பார்கள். இதனால் நம் நாட்டின் பொருட்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.
இதன்மூலம் நம் நாட்டுக்கு எதிரான வர்த்தக போரை டிரம்ப் தொடங்கி உள்ளார்.
டிரம்பின் இந்த வரி விதிப்பால் ஜவுளி, தங்க நகைகள், தோல் சார்ந்த தொழில், ரத்தினங்கள், கடல் உணவு சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் தொழில்கள் பாதிப்பை சந்திக்க உள்ளன. தமிழ்நாட்டில் இருந்தும் கணிசமான அளவுக்கு அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் 50 சதவீத வரியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக நம் நாட்டில் இருந்து கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யும்போது Anti Dumping Duty 2.65 சதவீதம், CVD எனும் Countervailing Duty 5.77 சதவீதம் உள்ளது. இதனுடன் தற்போது டிரம்பின் 50 சதவீத வரி சேர்ந்துள்ளது. இதனால் கடல் உணவு ஏற்றுமதி மீதான வரி என்பது 58.42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தமிழகத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியை பாதிக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளது.
ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் வகையில் 25 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியை மையப்படுத்தி இயங்கி வருகின்றன. இங்கிருந்து பதப்படுத்தப்பட்ட இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன், கடல் நண்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்கின்றன.
இதுதொடர்பாக தனியார் ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்தவர் கூறுகையில், ‛‛ஏற்கனவே கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. வழக்கமாக நாங்கள் மாதத்துக்கு 50 கன்டெய்னர்களில் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வோம். இதில் 20 கன்டெய்னர்கள் அமெரிக்கா செல்லும். தற்போது ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது'' என்றார்
அதேபோல் இன்னொரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்தவர் கூறுகையில், ‛‛அமெரிக்காவின் பதிலுக்கு பதில் வரி பலமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது கடல் உணவு ஏற்றுமதியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது'' என்றார்.
மற்றொரு நிறுவனத்தை சேர்ந்தவர் கூறுகையில், ‛‛60 சதவீத வண்ணமி இறால்களில் (Vanamei Shrimps) 60 சதவீதம் அமெரிக்காவுக்கும், மற்றவை ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்து. இங்கிருந்து அனுப்பப்படும் இறால்கள் 45 நாட்களில் அமெரிக்கா செல்லும். தற்போதைய வரி விதிப்பு அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை பாதித்துள்ளது'' என்றார்.
தற்போது டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் 13 கடலோர மாவட்ட மீனவர்களிடம் இருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன், கடல் நண்டுகளை வாங்கி ஏற்றுமதி செய்கின்றன. இதனால் அமெரிக்காவின் வரி விதிப்பால் மீனவர்கள் முதல் தமிழகத்தில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications