வேண்டாத வேலை பார்த்த டிரம்ப்.. திருப்பூர், கோவைக்கு பலத்த அடி! பல லட்சம் பேருக்கு பறிபோகும் வேலை!
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதித்திருக்கும் நிலையில் ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், கரூர் ஆகிய பகுதிகளில் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆர்டர்கள் செல்ல இருப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்றதிலிருந்து இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை சீண்டி வருவது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் 100% அளவுக்கு வரி விதிக்கும் நிலையில் அந்த நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் அதே அளவு வரி விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு 50% வரிவிதிப்பு விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கும் தனிப்பட்ட தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

50% இறக்குமதி சுங்கவரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 50% இறக்குமதி சுங்கவரி காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் முக்கிய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக "இந்தியாவின் நிட்வெர் தலைநகர்" என்று அழைக்கப்படும் திருப்பூரில், ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே பாதிப்பை உணர ஆரம்பித்துள்ளனர்.
பெரும் பொருளாதார பாதிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூரில் இருந்து ஆர்டர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள் நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே தங்களது ஆர்டர் பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டு விட்டதாக திருப்பூரின் முக்கிய ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கோடைகால ஆர்டரை உறுதி செய்வதற்கு முன் காத்திருக்க வேண்டும் என கூறியதாகவும், சில இறக்குமதியாளர்கள் கூடுதலாக விதிக்கப்படும் வரியை ஏற்றுமதியாளர்கள் தான் ஏற்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் மற்றொரு ஏற்றுமதியாளர் கூறுகிறார்.
பங்களாதேஷ், பாகிஸ்தான்
ஏற்கனவே நிட்வேர் வகை ஆடைகளுக்கு 14 சதவீதம் சுங்கவரி விதிக்கப்படும் நிலையில், தற்போது வரி உயர்வால் சுங்கவரி மொத்தமாக 64 சதவீதம் வரை சென்று விடுகிறது. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடைகள் பங்களாதேஷ், பாகிஸ்தான், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளின் ஆடைகளை விட 35 சதவீதம் வரை அதிக விலை உள்ளதாக மாறிவிடுகிறது.
திருப்பூர்
தமிழ்நாட்டின் திருப்பூர், கோயம்புத்தூர், கரூர் மாவட்டங்களில் மட்டும் 12.5 லட்சம் தொழிலாளர்கள் நெய்தறி மற்றும் ஆடை உற்பத்தியில் பணிபுரிகிறார்கள். வருடத்திற்கு சுமார் ரூ.45,000 கோடி மதிப்பிலான ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூரில் இருந்து வருடாந்திர ரூ.40,000 கோடி நிட்வெர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக Walmart, GAP, Costco போன்ற உலக பிராண்டுகளுக்கு முக்கிய சப்ளையர் திருப்பூர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நிட்வெர் ஏற்றுமதியில் இது 55% என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர், கோவை
கரூரில் இருந்து வருடத்திற்கு ரூ.9,000 கோடி ஹோம் டெக்ஸ்டைல் ஏற்றுமதி, அதில் ரூ.6,900 கோடி நேரடி ஏற்றுமதியாகிறது. இதேபோல், கோயம்புத்தூரில் இருந்து பருத்தி துணிகள், கிச்சன் துணிகள், டவல்கள் போன்றவை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. அமெரிக்காவின் இந்த வரி உயர்வால், ஏற்றுமதி ஆர்டர்கள் 40-50% வரை குறையும் அபாயம் உள்ளது. ஏற்றுமதி பாதிப்பால் சந்தை 10-20% வரை சரிவதால், அடுத்த சில மாதங்களில் 1-2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என தொழில் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
இந்தியாவுக்கு மட்டும் கடும் வரி
இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50% வரி, உலக அளவில் இதுவரை இல்லாத அளவு கடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷூக்கு 35-36% , பாகிஸ்தானுக்கு19%, வியட்நாமுக்கு 20-21%, கம்போடியாவுக்கு முன்பு 49%, இப்போது 19% (ஆகஸ்ட் 1 முதல்) வரி மட்டுமே விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்திய ஆடைகள் விலை உயர்ந்து, உலக சந்தையில் விற்பனை திறன் குறையும் அபாயம் உள்ளது. எனவே அமெரிக்க சந்தையை குறைத்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.












Click it and Unblock the Notifications