ஓபிஎஸ்-க்கு இடி! அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது.. சென்னை ஹைகோர்ட்
சென்னை: அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஒ பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தரமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நிலையில், இது ஓ பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ. பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஒ பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டது.
அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றினார். ஓ பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால், அதிமுக கட்சியும், சின்னமும் எடப்பாடி வசம் சென்றது உறுதியானது. எனினும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற லெட்டர் பேடுடன் ஓ பன்னீர் செல்வம் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். தனியாக நிர்வாகிகளையும் நியமித்து வந்தார்.
இந்த நிலையில், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ. பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
மனு மீதான விசாரணை நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால கோரிக்கையை தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்ததாகவும், நிலுவையில் உள்ள மூல வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினர்.
பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தான் கட்சியில் இருந்து சிலரை தான் நீக்கியதாகவும் அதற்கு தனக்கு உரிமை உள்ளதாகவும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனக்கு பின்னால் ஏராளமான தொண்டர்கள் உள்ளதால் அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் தனக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
நிலுவையில் உள்ள மூல வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அதற்கு தயாராக இருப்பதாகவும் ஒபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அழைப்பதை எதிர்ப்பதாகவும் வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் அழைத்துக்கொள்ளட்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications