பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தகுதியை தக்க வைக்கவே எங்கள் சின்னத்தில் போட்டி! வைகோ விளக்கம்!
சென்னை: பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தகுதியை தக்க வைக்கவே தங்கள் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகிக்கும் நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாக உள்ளது. மதிமுக 2 +1 கேட்கும் நிலையில் திமுக 1+1 கொடுக்க முன்வந்துள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை இன்னும் சுமூகமாக முடிந்தபாடில்லை. இதற்கு காரணம் உதயசூரியன் சின்னத்தில் தங்களால் போட்டியிட முடியாது என மதிமுக கறார் காட்டுவது தான்.

வைகோவையும், துரை வைகோவையும் சமாதானம் செய்வதற்கான வேலைகளில் திமுக இறங்கியுள்ளது. சின்னம் விவகாரத்தில் திமுக இந்தளவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதை எதிர்பாராத வைகோ, இதனால் சற்று கடும் அப்செட் ஆகியிருக்கிறார். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் கூட மதிமுகவுக்கு 'பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி, வழக்குத் தொடர்ந்தார். அது குறித்த விவரம் வருமாறு,'' நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி, புது டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையாளருக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடந்த 11.12.2023 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தார். மீண்டும் 05.02.2024 அன்று நினைவூட்டு கடிதமும் அனுப்பப்பட்டது.''
''இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையைப் பரிசீலித்து விரைந்து முடிவெடுத்து பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று மனு தாக்கல் செய்திருக்கிறார்.''
இந்தச் சூழலில் தான் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தகுதியை தக்க வைக்கவே தங்கள் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே மதிமுகவினர் சிலர் திமுக மீது விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கியிருப்பதால் அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முற்பட்ட வைகோ அது குறித்த ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு; ''கூட்டணி குறித்து மதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும் எனக்கு மன வேதனை அளிக்கிறது. தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க தன்னலம் கருதாது பாடுபடும் கட்சி மதிமுக என்பதை உணர வேண்டும்.'' என வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications