"சிவப்பு கட்சியின் கறுப்பு காந்தி! செங்கொடி சுமந்த சிங்கம்!" நல்லகண்ணுக்கு செவ்வணக்கம்! வைரமுத்து
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் (101) மறைவிற்கு, கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கலில் நல்லகண்ணுவை கறுப்பு காந்தி என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தோழர் நல்லகண்ணு
மறைந்துவிட்டார்
சிவப்புக் கட்சியின்
கறுப்பு காந்தி இறந்துவிட்டார்
எழுந்தாலும் விழுந்தாலும்
கடலின் புகழ்பாடும் அலைபோல,
கம்யூனிஸ்ட் கட்சியின்
ஏற்றத்திலும் இறக்கத்திலும்
செங்கொடி சுமந்த
சிங்கம் அவர்
கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும்
கம்யூனிஸ்ட் கட்சியின்மீது
கொண்டிருக்கும் மதிப்புக்கு
நல்லகண்ணுவின்
வாழ்க்கைமுறை ஒரு காரணம்
சுதந்திர இந்தியாவில்
தடைசெய்யப்பட்ட
கம்யூனிஸ்ட் கட்சி
இன்றுவரை
உயிர்ப்போடு இருப்பதற்கு
நல்லகண்ணு போன்றோரின்
தியாகமே காரணம்
செயற்கை நுண்ணறிவு
எதிர்காலத்தில்
இறந்தவர்களை மீட்டுருவாக்கும்
தொழில்நுட்பம் கண்டறிந்தால்
நல்லகண்ணுவின் மீட்பையே
நாடு கேட்கும்
அவர் வாழ்ந்தது
ஒரு நூறாண்டு;
அவரை மறக்காது
இந்த நூற்றாண்டு
அவருக்கு
என் செவ்வணக்கம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 01.02.2026 அன்று நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது.
பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு அவர்கள் 25. 02 2026 அன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக் குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications