விரைவில் வருகிறது 'வலிமை'.. சிமெண்ட் விலை குறையும்.. அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!
சென்னை: பெட்ரோல், டீசல் விலை, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க கட்டுமான பொருட்களின் விலை உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது.
அதுவும் கட்டிட கட்டுமானத்துக்கு உயிர்நாடியான சிமெண்டின் விலை நடுத்தர மக்களின் கைகளுக்கு அகப்படாமல் சென்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.

உச்சத்தில் சிமெண்ட் விலை
சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ''சிமெண்ட் ஆலை அதிபர்கள் பேசி வைத்து விலையை அதிகமாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர். விலை உயர்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசே சிமெண்ட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்'' என்று சட்டமன்றத்தில் பா.ம.க உறுப்பினர் அருள் கோரிக்கை விடுத்திருந்தார்.

வலிமை சிமெண்ட்
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் சிமெண்ட் விலை குறைந்துள்ளது என்றும் தமிழ்நாட்டில் அரசு சார்பில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள வலிமை சிமெண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின் வெளிச்சந்தைகளில் சிமெண்ட் விலை குறையும் என்றும் கூறி இருந்தார்.

உறுதி அளித்துள்ளது
இந்த நிலையில் இடையில் சற்று குறைந்திருந்த சிமெண்ட் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. மூட்டை ரூ.450 வரை விற்கப்படுகிறது. விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ள நிலையில் தமிழக தொழில்துறை அமைச்சகம் சிமெண்ட் விலை குறைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

காரணம் என்ன?
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'நிலக்கரித் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான போக்குவரத்துச் செலவினங்கள் ஆகியவை உயர்ந்த காரணத்தால், கடந்த 6.10.2021 அன்று சிமெண்ட்டின் விலையானது 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில் சிமெண்ட்டின் விலையானது குறைக்கப்பட்டு, தற்பொழுது 440 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

அரசு தொடர்ந்து நடவடிக்கை
தற்போது நடைமுறையிலுள்ள சிமெண்டின் விலையானது மார்ச் மாத விலையான ரூபாய் 420-ஐ ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து தற்சமயம் 440 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த உயர்வானது 4.7 சதவீதமே ஆகும். எனவே, சிமெண்டின் இந்த விலையேற்றம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது. தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தற்போதைய விலை இதுதான்
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்குக் குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 367,677 மெ.டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68.233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது, டான்செம் சிமெண்ட் 350 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

டான்செமின் விற்பனைப் பங்கு
தனியார் சிமெண்டின் விலையினை ஒப்பிடுகையில், 90 ரூபாய் குறைந்த விலையில் தரமான டான்செம் சிமெண்ட் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் தமிழ்நாட்டின் சிமெண்ட் விற்பனையில் டான்செமின் விற்பனைப் பங்கு மிகக்குறைவாகவே இருந்தது. சென்ற வருடம் 3.5 சதவீதம் ஆக இருந்த டான்செம்மின் விற்பனை பங்கானது நடப்பாண்டில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், டான்செம் விற்பனையினை அதிகரிக்கத் தொடர்ந்து நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வலிமை விலையை குறைக்கும்
மேலும், ஓரிரு வாரங்களில், தமிழக அரசின் டான்செம் நிறுவனம் "வலிமை" என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 90,000 மெ.டன் என் அளவில் வெளிச்சந்தையில் "அரசு" சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன், குறைந்த விலையிலும். நிறைந்த தரத்திலும் வலிமை சிமெண்ட் முதல்கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்ட்டின் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும்.












Click it and Unblock the Notifications