Vijay in Delhi: விஜய் பயப்பட வேண்டாம்! கரூரை விட டெல்லி பாதுகாப்பாகவே இருக்கும்! வானதி சீனிவாசன் விமர்சனம்
சென்னை: நடிகர் விஜய்க்கு கரூரில் இருப்பதை விட டெல்லியில் சிறப்பான பாதுகாப்பு கிடைக்கும் என்று வானதி சீனிவாசன் கூறியது கவனத்தை ஈர்த்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
ஒவ்வொரு வருடமும் பாரதிய ஜனதா கட்சி, பொதுமக்களோடு இணைந்து "நம்ம ஊரு மோடி பொங்கல்" என்னும் நிகழ்வை நடத்தி வருகிறது. பண்டிகைகள் பாரத நாட்டின் கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தவை. அந்தந்த மக்களுடன் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான் என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, எந்த இந்து பண்டிகைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதில்லை. பொங்கல் விழாவில் மட்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறார். எல்லா பானைகளிலும் பஞ்சுகளை வைத்து, சிறுபான்மை சகோதர சகோதரிகளையெல்லாம் சேர்த்து, இல்லாத ஒன்றை கொண்டாடுகிறார்.
சிறுபான்மை மத மக்கள் பொங்கல் கொண்டாடுவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? தமிழர்களுடைய கலாச்சாரத்தோடு, இறைவனை வணங்குகின்ற நிகழ்வோடு, சூரியனை வணங்குவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். சிறுபான்மை மதத்தவர்கள் அவர்களுடைய பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். நாங்கள் அதை மதிக்கிறோம், அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொங்கலே கொண்டாடாத ஒரு சமுதாயத்தோடு சேர்ந்து வைத்து, இந்து மக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் என்ற ஒன்றை ஸ்டாலின் கொண்டாடுகிறார். உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, பண்டிகைகளை கொண்டாடுபவர்களோடு இணைந்து பாரதிய ஜனதா கட்சி இந்த பொங்கலை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழருடைய பழமொழி. இந்த பொங்கலில் இருந்து ஆரம்பித்து, பாரதிய ஜனதா கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல்வேறு பிரம்மாண்டமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய இருக்கிறது. பிரதமர் விரைவில் தமிழகம் வர இருக்கிறார். தேர்தல் பணிகள் வேகம் எடுக்கும், ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறோம், இன்னும் அதிகமாக வேகம் எடுக்கும் என்றார்.
கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்தது கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. ஒத்துழைப்பு கொடுத்து வழிநடத்துகின்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மகளிர் அணியினர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் விருப்பமனு கேட்பது குறித்து கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. சிங்காநல்லூர் தொகுதியில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "வழக்கமாக பாதுகாப்பு கேட்பது என்பது ஒரு நடைமுறை. ஆனால் நிச்சயமாக கரூரை விட நல்ல பாதுகாப்பு டெல்லியில் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications