சேத்துப்பட்டில் விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. புகார் அளித்தும் போலீஸார் அலட்சியம்?
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் விசிக வட்டச்செயலாளர் நேற்றிரவு ஒரு முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என அவர் ஏற்கெனவே புகார் அளித்திருந்தும் போலீஸார் அலட்சியமாக இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நுண்ணறிவு, சட்டம் ஒழுங்கு போலீஸாரின் அலட்சியத்தையே இது காட்டுவதாகவும் கூறுகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு அரங்கநாதன் தெருவில் வசித்தவர் இளங்கோவன் (50). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107 வது வட்டச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.

அரசியல் எதிர்ப்பு
இவருக்கு அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் எதிர்ப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இளங்கோவன் சமீபத்தில் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என பாதுகாப்பு கேட்டு சிலர் மீது புகாரும் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

சுற்றிவளைத்து வெட்டு
இந்நிலையில் நேற்று இரவு சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெருவில் இளங்கோவனும் அவரது நண்பர் ஜெயவேலுவும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் திடீரென அவர்களை சுற்றி வளைத்து வெட்டியது. இதில் ஜெயவேல் தப்பி ஓடினார். இளங்கோவனை அக்கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உயிருக்கு போராடிய இளங்கோவனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முன்விரோதம்
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இளங்கோவனை வெட்டியது 6 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேத்துப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இளங்கோவன் மற்றும் சஞ்சய் பிரபு ஆகியோருக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சஞ்சய் பிரபு அவரது நண்பர்களோடு சேர்ந்து வெட்டியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மந்த நிலை
இளங்கோவன் தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என ஏற்கெனவே புகார் அளித்த நிலையில் போலீஸார் இந்த விவகாரத்தில் மந்த நிலையில் செயல்பட்டதால் கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications