துணிந்த திருமாவளவன்.. திமுக கூட்டணிக்கு விரைவில் குட்பை? சர்ச்சையான முழு வீடியோவும் X-ல் வெளியீடு
சென்னை: ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ சர்ச்சையானதால் உடனடியாக நீக்கப்பட்டது. இதுபற்றி கேட்டதற்கு அட்மின் தான் பதிவிட்டு நீக்கியுள்ளதாக திருமாவளவன் கூறிய நிலையில் தற்போது அவரது பேச்சு தொடர்பான முழு வீடியோவையும் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் திமுவுக்கும் அவருக்கும் இடையேயான விரிசல் என்பது அதிகரித்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணித்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சில நாட்களுக்கு முன்பு திருமாவளவன் அளித்த பேட்டி தான். அதாவது காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.
இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‛‛இந்த மாநாட்டில் அதிமுகவினரும் பங்கேற்கலாம்'' என கூறினார். இதன்மூலம் அவர் அதிமுகவை அழைத்தார். ஆனால் அதே பேட்டியில் இது தேர்தல் கூட்டணிக்கானது அல்ல என திருமாவளவன் கூறினார். ஆனாலும் கூட திருமாவளவனின் அழைப்பு என்பது திமுகவில் இருந்து பிரிந்து அவர் அதிமுகவோடு கூட்டணி வைக்கப்போகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியது.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில் நேற்று அடுத்த சர்ச்சை வெடித்தது. அதாவது'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும்' என்று திருமாவளவன் பேசிய வீடியோ அவரது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது. அந்த வீடியோவில் திருமாவளவன், ‛‛தமிழ்நாட்டில் இதற்கு முன்பு யாரும் கூட்டணி ஆட்சியில் குரலை உயர்த்தினார்களோ இல்லையோ 2016ல் கூட்டணி ஆட்சியில் என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டோம்.
முன்னாடி இருந்த கட்சிகளெல்லாம் இப்படி பேசினார்களா என்று தெரியவில்லை. கேபினட்டில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர். கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர்.பவர் ஷேர் என்பது எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது. 1999-ல் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் முன்வைத்த முழக்கம் 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' நெய்வேலி அம்பேத்கர் சிலைக்கு மாலை போடும் பொழுது எழுப்பிய முழக்கம் 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மக்களுக்கும் அதிகாரம்" என பேசியிருந்தார்.
தற்போது திமுக கூட்டணியில் விசிக பயணிக்கிறது. விசிகவுக்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனாலும் கூட தமிழக ஆட்சி அதிகாரத்தில் விசிக இல்லை. திமுக மட்டுமே உள்ளது. இதனால் இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த வீடியோ உடனடியாக டெலிட் செய்யப்பட்டது. ஆனாலும் சர்ச்சை மட்டும் ஓயவில்லை. இதுபற்றி மதுரையில் திருமாவளவனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛எனக்கு தெரியவில்லை என்னுடைய அட்மின் போட்டு இருப்பார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது நீண்டகாலமாக நாங்கள் விடுக்கும் கோரிக்கை தான். புதிதாக எதையும் சொல்லவில்லை' என தெரிவித்துவிட்டு வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார். உண்மையில் அரசியல் கட்சியின் தலைவரின் பக்கத்தில் அவரது அட்மினாக இருந்தாலும் கூட கேட்காமல் எந்தவொரு பதிவையும் செய்ய முடியாது. இதனால் திருமாவளவன் அனுமதியுடன் அந்த வீடியோ பதிவிட்டு இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறினர்.
இந்நிலையில் தான் நீக்கப்பட்ட வீடியோ மீண்டும் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ‛‛கடைசி மனிதனக்கு சனநாயகம்! எளிய க்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி'' என்று கடந்த செப்டம்பர் 12ம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசிய முழு வீடியோவும் லிங்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ என்பது மொத்தம் 1 மணிநேரம் 8 நிமிடம் 42 வினாடிகள் நீளம் கொண்டதாக உள்ளது. இதனால் திமுகவை எதிர்க்க திருமாவளவன் துணிந்து விட்டாரா? அப்படியென்றால் திமுகவில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications