என்னது திமுகவில் இணையப் போகிறதா விசிக? வதந்தி பரப்பும் பாஜக- நாதக. வன்னி அரசு கொந்தளிப்பு!
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இணையப் போவதாக டிவி சேனல் ஒன்றின் பெயரில் சமூக வலைதளங்களில் பொய்யான, அவதூறான செய்திகள் பகிரப்படுவதற்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் டிவி சேனல்கள் அல்லது இணைய ஊடகங்களின் பெயரில் போலியான செய்திகளை பரப்புகிற போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வகையில் தற்போது டிவி சேனல் ஒன்றின் செய்தியாக, மார்ச் 14-ந் தேதி திமுகவில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முழுமையாக இணைய இருக்கிறது என ஒரு பொய்ச்செய்தி பகிரப்பட்டது. இதனை அந்த டிவி சேனலின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து இது போலியான செய்தி என விளக்கம் தந்திருந்தது.

இது தொடர்பாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது சமூக வலைதளப் பக்கத்தில் அளித்துள்ள விளக்கம்:
விடுதலைச்சிறுத்தைகள் தனித்துவமாகவும் எழுச்சிகரமாகவும் துணிந்து களமாடுவதை சகிக்க முடியாத வலதுசாரிகளான பாஜகவும் நாதகவும் இணைந்து பரப்பும் அவதூறாகும். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக புரட்சியாளர் அம்பேத்கர்,தந்தை பெரியார் ஆகிய தலைவர்களின் கோட்பாடுகளை சமரசமின்றி தீவிரமாக முன்னெடுத்து செல்வதால் தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது.இந்த அங்கீகாரம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுப்பெருக்கால் கிடைத்ததாகும்.
இதைப்பொறுக்க முடியாத காழ்ப்புணர்ச்சியால் இம்மாதிரியான அவதூறுகளை பரப்பி வருகிறது வலதுசாரி கும்பல். இக்கும்பலை எப்போதும் தமிழ்நாடு ஏற்காது; அவர்களின் நச்சுக்கருத்தையும் ஏற்காது. திருமாவளவன் தலைமையில் தமிழ்நாட்டை காக்க உறுதி ஏற்போம். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
விசிகவின் திமுக கூட்டணியை உடைக்க முயற்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்றும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசிகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த ஆதவ் அர்ஜூனா, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தொடங்கி திமுகவை சீண்டிக் கொண்டே இருந்தார்; இதனால் ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா தற்போது நடிகர் விஜய்யின் வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்; இதேபோல விசிகவின் மாநில நிர்வாகி சங்கத் தமிழனும் தற்போது திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இந்த போலி செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.












Click it and Unblock the Notifications