வெற்றிப்பயணம் திட்டத்தால் நிதிச்சுமை? 340 அரசு பஸ்களில் மாற்றம்.. வருவாய் இழப்பை ஈடுகட்டுவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மகளிரின் இலவசப் பயணத்துக்கான வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் இயக்கப்படும் 340 விரைவு மற்றும் சொகுசு பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஆண் பயணிகளுக்கு ரூ.10 முதல் ரூ.16 வரை டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.. பயணிகளுக்கு இந்த மாற்றம் நிம்மதி அளித்தாலும், ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அரசு எப்படி ஈடுகட்டப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் இந்தத் திட்டத்தின் கீழ், மாநகர, நகர மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 12,695 பஸ்களில் இலவசப் பயண வசதி அளிக்கப்படுகிறது.

Vetri Payanam Scheme

இந்நிலையில், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கை 2,050-ல் இருந்து 2,390 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 340 விரைவு மற்றும் சொகுசு பஸ்கள் சாதாரண கட்டணத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஆண்களுக்கு குறைந்த கட்டணம்

இதனால் இந்த பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் தூரத்தை பொறுத்து ரூ.10 முதல் ரூ.16 வரை கட்டணம் குறைகிறது. பெண்களுக்கு இலவசப் பயணம், ஆண்களுக்குக் குறைந்த கட்டணம் என பயணிகளுக்குச் சலுகை கிடைத்துள்ளது. ஆனால், கட்டண மாற்றத்தால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயில் ஏற்படும் பாதிப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன..

ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை, டீசல் மற்றும் பஸ்கள் பராமரிப்புச் செலவு உள்ளிட்ட பல்வேறு நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.. அதுமட்டுமல்லாமல், வெற்றிப் பயணத் திட்டத்தால் தங்களுடைய வருவாய் பாதிக்கப்படுவதாகத் தனியார் பஸ் உரிமையாளர்களும் புகார் தெரிவித்து வருகிறார்கள்..

அதாவது இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த 3 நாட்களில் 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது.

பெண்களுக்கு இலவசப் பயணம்

அதேபோல, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசப் பயணம் கிடைப்பதால், பயணிகள் அரசு பஸ்களை அதிகம் தேர்வு செய்வதாகவும், இதனால் தனியார் பஸ்களின் வருவாய் குறைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையைப் பாதுகாப்பது எப்படி என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புதல், நிலுவைப் பணப்பலன்களை வழங்குதல், தினசரி வசூல் ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.

340 பஸ்களின் கட்டண மாற்றம்

அதனால் 340 பஸ்களின் கட்டண மாற்றத்தால் ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு, அதை ஈடுகட்ட அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதா, மகளிர் இலவசப் பயணத்துக்கான தொகை போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படுகிறதா என்பதற்கு போக்குவரத்துத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இப்போது எழுந்துள்ளது.

பயணிகளுக்கு சலுகை கிடைக்கும் அதே நேரத்தில், போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையும் ஊழியர்களின் நலனும் பாதிக்கப்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

இதற்கு தீர்வு என்ன

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சொல்லும்போது, "மகளிர் இலவசப் பயணத் திட்டத்துக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு உரிய காலத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குவது அவசியம்... அதேபோல, 340 பஸ்களின் கட்டண மாற்றத்தால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கணக்கிட்டு, அதற்கேற்ப கூடுதல் நிதி ஒதுக்க முடியுமா என்பதையும் அரசு ஆராய வேண்டும்.

தனியார் பஸ் உரிமையாளர்களின் வருவாய் இழப்பு குறித்த புகார்களையும் ஆய்வு செய்து, பயணிகளுக்கான சலுகைகள் தொடர்வதுடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களும், தனியார் பஸ் துறையும் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்" என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+