தனுஷ் மகன் ஹெல்மெட் அணியாமல் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டியதால் அபராதமா? காவல்துறை விளக்கம்
சென்னை: நடிகர் தனுஷின் 17 வயது மகன் ஹெல்மெட் அணியாமல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக கூறி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானது. மேலும் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

நடிகர் தனுஷ், 2004ம் ஆண்டு அறிமுக நடிகர்களில் ஒருவராக இருந்தார். இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், பாடலாசியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தமிழ் திரைத்துறையில் முக்கிய நட்சத்திரமாக மாறி உள்ளார்.
கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். இருவருமே சமூக ஊடகங்களில் அறிவித்தனர். ஐஸ்வர்யா- தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தவறு என்று விமர்சித்தனர். எனினும் ஐஸ்வர்யா தனுஷ் பிரிந்தாலும் முறையாக விவாகரத்து செய்யவில்லை என்றே சொல்கிறார்கள்.

இந்நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ராவுக்கு 17 வயது ஆகிறது. அவர் ஆர்15 பைக் ஓட்டுவதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பதிவில் யாத்ரா பைக் ஓட்ட அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக்கொடுப்பதாகவும், இதனை பார்த்த ஒருவர் போட்டோ வீடியோ எடுக்க, அந்த உதவியாளர் யாரும் போட்டோ வீடியோ எடுக்காதீங்க என்ற கூறுவதாகவும் வீடியோ உள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் மகன் யாத்ராவுக்கு 17 வயது தான் ஆகிறது என்றும் உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் தேனாம்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டி உள்ளார் என்றும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கூறி சிலர் வீடியோக்களை வெளியிட்டனர். ஆனால் அந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளை ஓட்டும் நபர் முக கவசம் அணிந்திருந்தார்.

சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த சூழலில் நடிகர் தனுஷின் மகனுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியது.. ஆனால் இதுபற்றி பிரபல ஊடகம் ஒன்று, சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த சுதாகர் ஐபிஎஸ், "சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள நபர் முக கவசம் அணிந்திருப்பதால் அவர் யார் என்று சரியாக கண்டுபிடிக்க இயலவில்லை. அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபர் யார் என்று கண்டுபிடித்து அபராதம் விதிப்போம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications