பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!
சென்னை: என்டிஏ கூட்டணிக்கு செல்லலாமா என்பது தொடர்பாக தவெக மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் 120 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 98 மாவட்டச் செயலாளர்கள் மூலமாக கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தை கூறியதாக சொல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே பாஜக தரப்பில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாகவும், விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி மூலமாக பாஜக அணுகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இதனால் கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கதவுகளை, கடந்த சில நாட்களாக விஜய் கொஞ்சம் திறக்கும் மனநிலையில் இருக்கிறார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விஜய்யுடன் கடைசி நிமிடத்தில் பாஜக கூட்டணி சேரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெக தரப்பில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று இருக்கிறது. மொத்தமுள்ள 132 மாவட்டச் செயலாளர்களில் 120 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களிடம் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? அல்லது தனித்து களமிறங்கலாமா? பாஜக உடன் கூட்டணி அமைக்கலாமா? என்று கேட்கப்பட்டுள்ளது.
முதலில் தேர்தல் பணிகள் தொடர்பாக மட்டுமே ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன்பின் கடைசி நேரத்தில் இந்த கேள்வியை புஸ்ஸி ஆனந்த் கேட்டிருக்கிறார். இதற்கு 120 மாவட்டச் செயலாளர்களில் 98 மாவட்டச் செயலாளர்கள் பாஜக உடனான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் அனைவரும் விஜய்யின் முடிவு என்னவோ, அதற்கு ஆதரவு அளிப்போம் என்றும் கூறி இருக்கின்றனர்.
இதனால் விஜய்யின் முடிவில் மாற்றம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் விஜய் உடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமியும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் விஜய்யின் டிமாண்ட் மிகப்பெரிதாக இருந்ததால், பாஜக பக்கம் திரும்பினார். தற்போது பாஜக தரப்பில் துணை முதல்வர் பதவியும், 60 சீட்டும் விஜய்க்கு கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications