கரூர் சம்பவத்திற்கு பின் முதல் முறை.. வெளியே எடுத்து வரப்பட்ட விஜய் பிரசார வாகனம்! புதுவை புறப்பட்டது
சென்னை: புதுவையில் நாளை தவெக பொதுக்கூட்டம் நடக்க உள்ள நிலையில், பனையூர் அலுவலகத்தில் விஜய்யின் பிரசார வாகனம் புறப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக 72 நாட்களுக்கு பிறகு தவெக அலுவலகத்தில் இருந்து வெளியே எடுத்து வரப்பட்டுள்ளது விஜய்யின் பிரசார வாகனம். மேடை அமைக்காமல் தனது பிரசார வாகனத்தில் இருந்தவாறே மக்களை சந்திக்கிறார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். பிற கட்சியில் இருந்து மூத்த தலைவர்களை கட்சியில் இணைக்க தொடங்கியிருக்கும் விஜய், அடுத்த கட்டமாக தனது பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளார்.

ஈரோட்டில் பிரசாரம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் இதுவரை பொதுக்கூட்டம் எதையும் விஜய் நடத்தவில்லை. காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ளரங்கு கூட்டத்தில் மக்களை சந்தித்தார். தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதாவது ஈரோட்டில் இருந்து தொடங்க திட்டமிட்டு அதற்கான அனுமதி பெறும் ஏற்பாடுகளை, தவெகவில் சமீபத்தில் இணைந்த செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்பாக புதுவையில் பிரசாரம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்தார். புதுவையில் ரோடு ஷோ செல்ல அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
புதுவையில் விஜய் பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம் நடத்த புதுவை போலீசார் ஓகே சொன்னனர். இதையடுத்து, புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து நாளை காலை 8 மணிக்கு காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வருகிறார்.
அதன்பின் காலை 10.30 மணிக்கு ஹெலிபேடு மைதானத்திற்கு வரும் விஜய், அவரது பிரசார வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். கூட்டம் முடிந்தவுடன் அவர் மீண்டும் காரில் சென்னை திரும்புகிறார். விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் மைதானம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது.
5000 பேருக்கு மட்டுமே அனுமதி
உப்பளம் சாலையில் இருந்து கூட்டம் நடைபெறும் பாதையின் இருபுறம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி தடகளங்கள் மூலம் அடைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கியூஆர் கோடு வசதியுடன் கூடிய பாஸ் வைத்த நிர்வாகிகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று புதுவை போலீசார் தெரிவித்தனர்.
தொண்டர்கள் அத்துமீறாமல் இருக்க பாதுகாப்புக்காக ஆங்காங்கே இரும்பு தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்துக்கு இன்னும் ஒருநாளே இருப்பதால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புறப்பட்டது விஜய்யின் பிரசார வாகனம்
விஜய் நாளை தினம் தனது பிரசார பேருந்தில் நின்றபடியே பேச திட்டமிட்டுள்ளார். பொதுக்கூட்ட மேடை எதுவும் இல்லாமல் பேருந்தில் நின்றபடியே பேசுகிறார். இதற்காக விஜயின் பிரசார பேருந்து இன்று சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த பேருந்தில் நின்றபடிதான் விஜய் கரூரில் பேசினார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக அலுவலகத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்பொழுது புதுவை பொதுக்கூட்டத்திற்காக சுமார் 72 நாட்கள் கழித்து விஜயின் வாகனம் வெளியே எடுத்து வரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications