முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன?
சென்னை: முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இதில் இரு தரப்புமே நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் அவரவரின் வழக்கறிஞர்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராவார் என்று தெரிகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதா தொடர்ந்த இந்த விவாகரத்து மனு மீதான முந்தைய விசாரணையின் போது, இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலவரப்படி ஜூன் 15 அன்று நடக்கும் விசாரணையில் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இரு தரப்புமே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது.

அதற்குப் பதிலாக, இரு தரப்பினரும் தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராவார்கள் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், முதல்வர் விஜய் மீது மிகக் கடுமையான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டில், விஜய் ஒரு பிரபல திரைப்பட நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை தான் கண்டுபிடித்ததாக சங்கீதா குறிப்பிட்டிருந்தார். அந்த உறவை கைவிடுவதாக விஜய் தனக்கு உறுதியளித்த போதிலும், எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி அவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் பழகி வந்ததாகக் குற்றம் சாட்டினார்.
விஜய் தனது குடும்ப மற்றும் சமூக வட்டாரங்களில் இருந்து தன்னை முற்றிலும் ஒதுக்கி வைத்ததாகவும், அதேநேரம் அந்த நடிகையுடன் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குச் சென்றதாகவும் சங்கீதா தெரிவித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான போது, அவை தனக்கும் தனது பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகியோருக்கும் கடுமையான அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக வேதனை தெரிவித்திருந்தார்.
தனக்கு வழங்கப்பட்டு வந்த வசதிகளை விஜய் திடீரெனப் பறித்துக் கொண்டதாகவும், தனது சுதந்திரமான நடமாட்டத்திற்குப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எங்கள் திருமணம் தற்போது வெறும் காகிதத்தில் மட்டுமே பெயரளவில் நீடிக்கிறது.
இந்த உறவை மீண்டும் சேர்த்து வைக்க முடியாத அளவிற்குப் பிரிந்துவிட்டதால், எனக்கு விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சங்கீதா தனது மனுவில் கோரியுள்ளார். தற்போதைய சூழலில் பாதுகாப்பு மற்றும் பிற நடைமுறை காரணங்களால் இரு தரப்பும் காணொலி மூலமாகவே ஆஜராக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போது புதிய நீதிபதியாக சுஜாதா பொறுப்பேற்று இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்கனவே ஜீவனாம்சம் மற்றும் சொத்து பகிர்வுகள் குறித்து சுமுகமான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படும் சூழலில், ஜூன் 15 அன்று நீதிமன்றம் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications