பாவக் காசு எனக்கு வேண்டாம்.. விஜய் எடுத்த மிகப் பெரிய முடிவு! தனியார் மயமாகும் டாஸ்மாக்! பின்னணி?
சென்னை: தமிழக அரசுக்கு மிகப்பெரும் வருவாயை ஈட்டி தந்த டாஸ்மாக் இனி தனியார் கைகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 2003 ஆம் ஆண்டு மது விற்பனையை தமிழக அரசு ஏற்று நடத்திய நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க விஜய் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன டாஸ்மாக் கடைகளை அரசை நடத்துவது சரியில்ல என்ற காரணத்தை முன்வைத்து விஜய் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மூலம் தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் டாஸ்மாக் தமிழகம் முழுவதும் சில்லரை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் செயல்படுகின்றன.

இந்த மதுக்கடைகளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் 180 மில்லி, 360 மில்லி, 740 மில்லி ஆகிய அளவுகளில் விற்கப்படுகிறது. 140 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன.
டாஸ்மாக்
நாள்தோறும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் தரும் துறையாக டாஸ்மாக் இருக்கிறது. சாதாரண நாட்கள் மட்டும் அல்ல, அது வார விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். பொங்கல் தீபாவளி ஆகிய நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா
தமிழகத்தில் டாஸ்மாக் மட்டுமல்லாது தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களோடு இணைந்த பார்கள், மனமகிழ் மன்றங்களில் இருக்கும் பார்கள், பப்புகள், கிளப்புகள் என தனியார் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2024 2025 ஆம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003 ஆம் ஆண்டு வரை டாஸ்மாக் தனியார் வசம் இருந்த நிலையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் மதுபான சில்லறை விற்பனையை நேரடியாக அரசை ஏற்று நடத்தும் என அறிவித்தார்.
தனியார்மயம்
அப்போது தனியார் மதுபான விற்பனை நிறுத்தப்பட்டு டாஸ்மாக் மூலம் நேரடி அரசு மதுபான கடைகள் மூலம் விற்பனையில் இறங்கியது. அதற்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம்தான் மதுபான சில்லறை விற்பனையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனையை கைவிட்டு மீண்டும் தனியார் கைகளுக்கு கொடுக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் அரசு
இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த சட்ட திருத்தம் விரைவில் நடக்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். முதற்கட்டமாக நகர்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, படிப்படியாக முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் பார்களுடன் சேர்த்து சுமார் 2,500 டாஸ்மாக் மது கடைகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படும்.
அரசு உரிமக் கட்டணம்
ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட அரசு உதவித்தொகைகள் டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே செல்வதாக பொதுவெளியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதோடு, பாட்டிலுக்கு 10 ரூபாய், பார்ட்டி பண்டு என பல பிரச்சனைகள் தமிழக அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டாஸ்மாக்கை தனியார் மயமாக்கினால் அரசு மீது விழும் குற்றச்சாட்டுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடைகளை இயக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு உரிமக் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு குறிப்பிட்ட வருவாய் கிடைக்கும்.
வருவாய் ஆதாரங்கள்
இந்த முறை கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக முழுவதும் 4048 டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மாநில அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. டாஸ்மாக் கடைகளை தனியார் துறையிடம் ஒப்படைப்பதால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாயை ஈடுகட்ட புதிய வருவாய் ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கைகளையும் அரசு ஆய்வு செய்து வருவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
